ஸ்வப்னா சுரேசுக்கு 30-ந்தேதி வரை நீதிமன்ற காவல்: கொச்சி கோர்ட்டு உத்தரவு
கேரள தங்கம் கடத்தல் விவகாரத்தில் பெங்களூருவில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேசுக்கு 30-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து கொச்சி கோர்ட்டு உத்தரவிட்டது.
திருவனந்தபுரம்,
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கத்தை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கடந்த 5-ந்தேதி கைப்பற்றினர். இந்த கடத்தல் தொடர்பாக தூதரக முன்னாள் ஊழியர் சரித் ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.
இந்த கடத்தலில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் என்ற, மாநில தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) துறை முன்னாள் ஊழியர் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோர் தலைமறைவாயினர். இவர்கள் 3 பேர் மட்டுமின்றி எர்ணாகுளத்தை சேர்ந்த பாசில் பரீத் ஆகிய 4 பேர் மீதும் உபா சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதன் பலனாக ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் இருவரும் நேற்று முன்தினம் பெங்களூருவில் சிக்கினர். அவர்களை கைது செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் கேரளா கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி காரிலேயே அவர்களை நேற்று காலையில் கேரளாவின் கொச்சிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் ஆலுவாவில் உள்ள ஆஸ்பத்திரியில் இருவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு சிறப்பு கோர்ட்டில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களை 30-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து இருவரும் கொரோனா பரிசோதனைக்காக அதற்கான மையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
முன்னதாக இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று (திங்கட்கிழமை) விசாரிக்கப்படுகிறது.
இதற்கிடையே தங்கம் கடத்தல் குற்றவாளிகள் வெளி மாநிலத்துக்கு தப்பிய விவகாரத்தில் மாநில அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான ஊரடங்கு அமலில் இருக்கும்போது உயர் அதிகாரிகளின் உதவியில்லால், இந்த குற்றவாளிகளால் எப்படி வெளிமாநிலத்துக்கு தப்ப முடியும்? என எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா கேள்வி எழுப்பி உள்ளார்.
இதைப்போல தங்கம் கடத்தல் விவகாரத்தில் மாநில ஐ.டி. செயலாளர் சிவசங்கர் மீதும் சந்தேகம் இருக்கும்போது, அவரை ஏன் இன்னும் இடைநீக்கம் செய்யவில்லை? எனவும் கேள்வி எழுப்பிய அவர், இந்த விவகாரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார்.
முன்னதாக, ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட இருவரையும் பெங்களூருவில் இருந்து அழைத்து வரும் வழி நெடுகிலும் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தவகையில் தமிழகம்-கேரள எல்லைப்பகுதியான வாளையார் சோதனைச்சாவடி, திருச்சூர் மாவட்ட பலியக்கரா சுங்கச்சாவடி, ஆலுவா ஆஸ்பத்திரி உள்ளிட்ட இடங்களில் அவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், குற்றவாளிகள் வெளி மாநிலத்துக்கு தப்பிய விவகாரத்தில் மாநில பா.ஜனதா தலைவர் சுரேந்திரனும் மாநில அரசை கடுமையாக தாக்கி உள்ளார். அவர் கூறுகையில், இந்த ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் பயணம் செய்வதை தடுக்கும் அரசு, குற்றவாளிகளுக்கு மட்டும் தப்புவதற்கு உதவி புரிகிறது என்று குற்றம் சாட்டினார்.
அதேநேரம் இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் யாரையும் தனது அரசு பாதுகாக்கவில்லை என முதல்-மந்திரி பினராயி விஜயன் மறுத்து உள்ளார். மேலும் தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணையையும் அவர் வரவேற்று உள்ளார்.