இந்தியாவில் 24 மணி நேரத்தில் 20 ஆயிரம் பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்

இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து ஏறத்தாழ 20 ஆயிரம் பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். குணம் அடைவோர் விகிதாசாரம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

Update: 2020-07-12 21:32 GMT
புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தினந்தோறும் ஏறுமுகத்தில் செல்வது கவலை அளிக்கிற அம்சமாக அமைந்துள்ளது.

அதே நேரத்தில், சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது ஆறுதலாக அமைந்துள்ளது.

கொரோனாவில் இருந்து நாமும் மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கையை இது கொரோனா நோயாளிகளுக்கு தருகிறது. அந்த வகையில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 19 ஆயிரத்து 235 பேர் தொற்று குணமாகி வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.

இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 34 ஆயிரத்து 620 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் குணம் அடைந்தோர் விகிதாசாரமும் 62.93 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.

அனைத்து வகையான முயற்சிகளின் காரணமாக அதிகமான மக்கள் குணம் அடைந்து வருகின்றனர். அந்த வகையில் சிகிச்சை பெறுவோரைக்காட்டிலும் கூடுதலாக 2 லட்சத்து 42 ஆயிரத்து 362 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

இந்தியாவில் தொற்று பரவல் வேகத்துக்கு ஈடு கொடுத்து, குணம் அடைவோர் எண்ணிக்கையும் அதிகரிக்க காரணம், மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கையும், திறமையான மருத்துவ மேலாண்மையும், சரியான நேரத்தில் நோய் அறிதலும் குணம் அடைவோர் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரிக்கச்செய்கிறது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கான மருத்துவ உள் கட்டமைப்பு வசதிகளில் தொடர்ந்து மேம்பாடு காணப்பட்டு வருகிறது.

இந்த வகையில் தற்போது நாடு முழுவதும் கொரோனாவுக்கென 1,370 அர்ப்பணிக்கப்பட்ட ஆஸ்பத்திரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, 3,062 கொரோனா சுகாதார மையங்களும், 10 ஆயிரத்து 334 கொரோனா பராமரிப்பு மையங்களும் உருவாக்கப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு இதுவரை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 1 கோடியே 22 லட்சத்து 36 ஆயிரம் சுய பாதுகாப்பு கவச உடைகளையும், கருவிகளையும் வழங்கி உள்ளது. 2 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரம் என்-95 முக கவசங்களையும் வினியோகித்து இருக்கிறது.

மத்திய அரசானது, கொரோனா பரிசோதனைகளுக்கான அனைத்து தடைகளையும் நீக்கியும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரவலான சோதனைக்கு உதவியும் ஒவ்வொரு நாளும் பரிசோதனைகளை அதிகரித்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, 10 லட்சம்பேருக்கு 8396.4 என்ற அளவில் பரிசோதனை நடத்தப்படுகிறது.

பரிசோதனைக்கூடங்களின் எண்ணிக்கை 1,184 ஆக அதிகரிக்கப்பட்டிருப்பதுவும் சோதனைகள் அதிகரிக்க ஒரு காரணமாக அமைந்துள்ளது.

மேலும் செய்திகள்