கர்நாடகாவில் ஊழியரின் உறவினருக்கு கொரோனா பாதிப்பு; மைசூர் அரண்மனை மூடப்பட்டது

கர்நாடகாவில் ஊழியரின் உறவினருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் மைசூர் அரண்மனை மூடப்பட்டு உள்ளது.

Update: 2020-07-09 16:03 GMT
பெங்களூரு,

கர்நாடகாவில் சுற்றுலா நகரம் என அழைக்கப்படும் மைசூர் நகரில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானவர்கள் சுற்றுலா செல்வார்கள்.  அங்குள்ள மைசூர் அரண்மனை, விலங்கியல் பூங்கா, சாமுண்டி மலை மற்றும் பிற பகுதிகளை பார்வையிடுவதற்காக சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம்.

இவற்றில் மைசூர் அரண்மனையில் வெளிநாட்டவர், உள்நாட்டவர் என ஒரு மாதத்தில் குறைந்தது 2 முதல் 3 லட்சம் சுற்றுலாவாசிகள் வந்து செல்வார்கள்.  நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த எண்ணிக்கை இந்த வருடம் குறைந்தது.  இந்த நிலையில், மைசூர் அரண்மனையில், பணிபுரிந்து வரும் ஊழியரின் உறவினர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  இதுபற்றிய தகவல் வெளியான நிலையில், மைசூர் அரண்மனை இன்று மூடப்பட்டது.

இதனை தொடர்ந்து கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்டு மீண்டும் வரும் திங்கட்கிழமை அரண்மனை திறக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்