இந்தியாவில் 7½ லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7½ லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், அதில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4½ லட்சத்தை தாண்டி இருக்கிறது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி, தினந்தோறும் ஆயிரக்கணக்கானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்துக்குள் 22 ஆயிரத்து 752 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 42 ஆயிரத்து 417 ஆக உயர்ந்துள்ளது.
இதே 24 மணி நேரத்துக்குள் 16 ஆயிரத்து 883 பேர் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 56 ஆயிரத்து 831 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் புதிதாக 482 பேரின் உயிரையும் கொரோனா பறித்துள்ளது. இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்து 642 ஆக உயர்ந்து இருக்கிறது.
பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் முதல் இடத்தில் இருக்கும் மராட்டியத்தில் 9,250 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 17 ஆயிரத்து 121 ஆக இருக்கும் நிலையில், இதில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 558 பேர் குணமடைந்துவிட்டனர்.
தமிழகத்தில் புதிதாக பாதிப்புக்கு உள்ளானவர்களுடன் சேர்த்து 1 லட்சத்து 22 ஆயிரத்து 350 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதில் 74 ஆயிரத்து 167 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில், 1,700 பேர் உயிரிழந்துள்ளனர். 3-வது இடத்தில் இருக்கும் டெல்லியில் பாதிப்பு 1 லட்சத்து 2 ஆயிரத்து 831 ஆகவும், பலி எண்ணிக்கை 3,165 ஆகவும் உள்ளது. அங்கு நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகாவில் 26,815 பேரும், ஆந்திராவில் 21,197 பேரும், கேரளாவில் 5,894 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அதே நேரத்தில் கர்நாடகாவில் 416 பேரையும், ஆந்திராவில் 252 பேரையும், கேரளாவில் 27 பேரையும் கொரோனா காவு வாங்கி இருக்கிறது. புதுச்சேரியில் 930 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகி இருக்கும் வேளையில், அங்கு 14 பேர் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தங்கள் உயிரை பறிகொடுத்துள்ளனர்.
இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.