மும்பையில் பரபரப்பு: அம்பேத்கர் வீடு மீது தாக்குதல்
மும்பையில் உள்ள அம்பேத்கர் வசித்த வீடு மீது மர்மநபர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை,
சட்டமேதை அம்பேத்கரின் பங்களா வீடு மத்திய மும்பை தாதரில் உள்ள இந்து காலனியில் அமைந்துள்ளது. 2 மாடிகளை கொண்ட பாரம்பரிய கட்டிடமான இந்த வீடு ‘ராஜ்குரு’ என அழைக்கப்படுகிறது.
அம்பேத்கர் 20 வருடங்களாக இந்த வீட்டில் தான் வசித்து வந்தார். தற்போது அம்பேத்கரின் மருமகள், அவரது பேரன்களான வஞ்சித் பகுஜன் அகாடி கட்சி தலைவரான பிரகாஷ் அம்பேத்கர், ஆனந்த் ராவ் மற்றும் பீம்ராவ் ஆகியோர் வசித்து வருகிறார்கள்.
இதுதவிர இந்த வீட்டில் அம்பேத்கரின் தனிப்பட்ட உடைமைகளை கொண்டிருக்கும் அருங்காட்சியகம், அவரது புத்தகங்கள், அஸ்தி, கலைப்பொருட்கள் இருக்கின்றன.
இந்தநிலையில், நேற்றுமுன்தினம் இரவு மர்மநபர் கற்களை வீசி எறிந்து ராஜ்குரு பங்களாவின் கண்ணாடி ஜன்னல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
வீட்டு வளாகத்தில் இருந்த பூந்தொட்டிகளை தள்ளிவிட்டு சேதப்படுத்தினார். அங்குள்ள கண்காணிப்பு கேமராவையும் அடித்து நொறுக்கினார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். அம்பேத்கர் வீடு மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை உண்டாக்கி இருக்கிறது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மனநிலை பாதிக்கப்பட்டவரை போல காணப்படும் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்பேத்கர் வீடு தாக்கப்பட்டதுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து, மாநில முதல்- மந்திரி உத்தவ் தாக்கரே, அம்பேத்கர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.