தங்க கடத்தல்; கேரள முன்னாள் தலைமை செயலாளரிடம் இருந்து ஐ.டி. செயலாளர் பதவியும் பறிப்பு

கேரளாவில் தங்க கடத்தல் விவகாரத்தில் முதல் மந்திரியின் முன்னாள் தலைமை செயலாளரிடம் இருந்து ஐ.டி. செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-07-07 11:53 GMT
திருவனந்தபுரம்

கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக நாட்டின் தூதரகத்துக்கு உணவுப் பொருட்கள் என்ற பெயரில் தங்கம் கடத்தப்படுகிறது என ரகசிய தகவல் கிடைத்தது.  தொடர்ந்து, திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்த பார்சலை சோதனையிட்டதில், ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.

இந்த கடத்தலில் கேரள தகவல் தொடர்பு துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேசுக்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக, இவர் அமீரக நாட்டு தூதரகத்தில் பணியாற்றியிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, ஸ்வப்னா சுரேஷ் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர்.

முதல் மந்திரி பினராயி விஜயனின் தலைமை செயலர் எம். சிவசங்கர்தான் கேரள தகவல் தொடர்பு துறைக்கும் செயலர். இதனால், அவரிடமும் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.  ஸ்வப்னாவை சிவசங்கர்தான் பதவியில் நியமனம் செய்துள்ளார் என்றும் புகார் எழுந்தது.

ஆனால், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஸ்வப்னாவின் நியமனம் குறித்து தனக்கு தெரியாது என விளக்கமளித்துள்ளார்.  இந்த நிலையில், எம்.சிவசங்கரின் தலைமை செயலர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.  இவருக்கு பதிலாக மீர் முகமது  நியமிக்கப்பட்டுள்ளார். எனினும், சிவசங்கர் ஐ.டி துறை செயலராக தொடர்ந்து பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மற்றொரு அதிரடியாக கேரளாவில் தங்க கடத்தல் விவகாரத்தில் சிவசங்கரிடம் இருந்து ஐ.டி. செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டு உள்ளது.  அவருக்கு பதிலாக முகமது ஒய். சபீருல்லா ஐ.டி. பிரிவு புதிய செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்