தமிழகத்தில் உள்ள எந்தவொரு குழந்தைகள் காப்பகத்திலும் கொரோனா தொற்று இல்லை - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

தமிழகத்தில் உள்ள அனைத்து குழந்தைகள் காப்பகத்திலும் எந்தவொரு குழந்தைக்கும் கொரோனா தொற்று இல்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

Update: 2020-07-07 08:59 GMT
புதுடெல்லி,

சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சில குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அந்த காப்பகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 35 குழந்தைகள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து உச்சநீதிமன்றம் இது குறித்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது. மேலும் நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகள் காப்பகத்திலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா? என்பதை அந்தந்த மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, சென்னை ராயபுரம் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள 35 குழந்தைகள் குணமாகிவிட்டனரா? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சென்னை ராயபுரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட 35 குழந்தைகள் குணமாகிவிட்டனர் என்றும், குழந்தைகள் காப்பகத்தில் புதிதாக கொரோனா தொற்று இல்லை என்றும் தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் எந்தவொரு குழந்தைக்கும் கொரோனா தொற்று இல்லை எனவும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக, நீதிமன்றத்துக்கு உதவ வழக்கறிஞர் கவுரவ் அகர்வாலை நியமித்த  நீதிபதிகள் வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு தள்ளி வைத்துள்ளனர். பதில் மனு தாக்கல் செய்யாத உத்தரப் பிரதேசம், பஞ்சாப், திரிபுரா ஆகிய மாநிலங்கள் வெள்ளிக்கிழமை பதில் மனு தாக்கல் செய்யவும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்