கொரோனா வைரசுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை பெற தேங்காய் எண்ணெய் உதவும்? ஆய்வில் தகவல்

கொரோனா வைரசுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை பெறுவதற்கு தேங்காய் எண்ணெய் உதவும் என ஆய்வு முடிவொன்று தெரிவிக்கின்றது.

Update: 2020-07-06 15:46 GMT
புதுடெல்லி,

கொரோனா வைரசை தடுக்கும் வகையிலான எதிர்ப்பு சக்தியை அளிக்க கூடிய பொருளை தேடி மக்கள் அலைகின்றனர்.

கொரோனா வைரசை குணப்படுத்தும் பொருட்களில் கவனம் செலுத்தும்படி ஆயுர்வேத பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகளை அரசு வலியுறுத்தி வரும் நிலையில், ஜர்னல் ஆப் அசோசியேசன் ஆப் பிசிசியன்ஸ் என்ற அமைப்பு இந்த மாதம் தேங்காய் எண்ணெய் பற்றி ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வில், நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் பலன்கள் மற்றும் நுண்ணுயிரிகளுக்கு எதிராக செயல்படும் திறன் ஆகியவை கவனத்தில் கொள்ளப்பட்டன.

இந்த ஆய்வு முடிவில், தேங்காய் எண்ணெயில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் செயல்பாட்டு தன்மையானது, மனித உடலில் எதிர்ப்பு சக்தியை தூண்ட உதவுகிறது என தெரிய வந்துள்ளது.

தேங்காய் எண்ணெய் ஆரோக்கியம் நிறைந்தது என்றும் கடந்த 4 ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே தேங்காய் எண்ணெயை ஆயுர்வேத மருத்துவம் அங்கீகரித்து வந்து உள்ளது என்றும் ஆய்வு தெரிவிக்கின்றது.

தேங்காய் எண்ணெய் மற்றும் அதில் இருந்து கிடைக்கும் பிற பொருட்கள், மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு பாதுகாப்பு நிறைந்தது.  நோயெதிர்ப்பு சக்தியை தூண்டும் பொருட்களாக சிறந்த முறையில் செயல்படும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

எனினும், மனிதர்களில் இதுபற்றிய பரிசோதனைகள் குறைந்த அளவிலேயே நடந்துள்ளன என அறியப்படுகிறது.

இதுபற்றி ஆய்வு மேற்கொண்டவர்களில் ஒருவரான டாக்டர் ஷஷாங் ஜோஷி கூறும்பொழுது, தேங்காய் எண்ணெய் பற்றி ஆய்வு மேற்கொள்வதற்கு, கொரோனா வைரஸ் ஒன்றும் முக்கிய காரணம் இல்லை.  தேங்காய் எண்ணெயை அதிகம் பயன்படுத்தும் கேரளவாசிகள், கொரோனா வைரசுக்கு எதிராக திறம்பட செயல்படுகின்றனர் என்பதே உண்மையாகும் என கூறியுள்ளார்.

சீனாவின் உகான் நகரில் கடந்த வருட இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு முதன்முதலாக இந்தியாவில் கேரளாவிலேயே கண்டறியப்பட்டது.  சீனாவின் உகான் நகரில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.  இதன்பின் சிகிச்சையில் அவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,14,978 ஆக அதிகரித்துள்ளது.  இதுவே நமது அண்டை மாநிலம் ஆன கேரளாவில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்த அளவிலேயே காணப்படுகிறது.

கேரளத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,522 ஆக உள்ளது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

மேலும் செய்திகள்