கொரோனா பரவலை தடுக்க கடும் கட்டுப்பாடுகளுடன் கர்நாடகத்தில் இன்று முழு ஊரடங்கு

கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடும் கட்டுப்பாடுகளுடன் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மக்கள் தேவையின்றி வெளியில் நடமாடக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-07-05 01:51 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

கொரோனா பாதிப்பும், பலியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே வேளையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருபவர்களும் குணமடையும் காலம் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் தனியார், அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற முடியாமல் உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே வேகமாக பரவும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி வரை ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கர்நாடக அரசு கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. மேலும் இரவு நேர முழு ஊரடங்கு இரவு 8 மணிக்கு தொடங்கி காலை 5 மணி வரை அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கர்நாடக இந்த அறிவிப்பை வெளியிட்ட பிறகு முதல் ஞாயிறு ஊரடங்கு இன்று கர்நாடகத்தில் அமல்படுத்தப்படுகிறது. இந்த ஊரடங்கு வழக்கமான இரவு ஊரடங்குடன் நேற்று இரவு 8 மணிக்கே தொடங்கிவிட்டது. இந்த ஊரடங்கின்போது, மருத்துவமனைகள், மருந்து கடைகள், அத்தியாவசிய சேவைகளை வழங்கும் கடைகள், காய்கறி கடைகள் திறக்கப்பட்டிருக்கும். உணவகங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் உணவுகளை பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது.

ஆடு, கோழி உள்ளிட்டவற்றின் இறைச்சி, மீன் விற்பனைக்கு தடை இல்லை. பொதுமக்கள் தேவையின்றி வெளியில் நடமாடக்கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பஸ்கள், ஆட்டோக்கள், டாக்சிகள், வணிக நிறுவனங்கள் உள்பட அத்தியாவசிய சேவைகளை தவிர அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கும்.

மேலும் மக்களின் நடமாட்டத்தை தடுக்கும் நோக்கத்தில் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பெங்களூருவில் மேம்பாலங்கள், பிரதான சாலைகள் உள்பட பெரும்பாலான சாலைகளை போலீசார் தடுப்புகளை வைத்து மூடியுள்ளனர். ஆம்புலன்ஸ் வாகனங்கள், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள கர்நாடக பகுதியில் சாலைகள் முழுவதுமாக மூடப்படுகின்றன. மீண்டும் பஸ்கள் நாளை(திங்கட்கிழமை) காலையில் இருந்து ஓடத்தொடங்கும்.

மேலும் செய்திகள்