தடுப்பூசியில் அவசரப்படுத்துவதாக விஞ்ஞானிகள் விமர்சனம்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பதில்

கொரோனா தடுப்பூசியை கொண்டு வருவதில் அவசரப்படுத்துவதாக விஞ்ஞானிகள் விமர்சித்துள்ளனர். அதற்கு பதில் அளித்துள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், உலகளவில் ஏற்கப்பட்ட அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்படுவதாக கூறி உள்ளது.

Update: 2020-07-05 00:00 GMT
புதுடெல்லி,

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நாளுக்கு நாள் வேகம் எடுத்து வருவதால், விரைவாக தடுப்பூசியை கொண்டு வர இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோ டெக் நிறுவனத்துடன், புனேயில் உள்ள இந்திய வைராலஜி நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து கூட்டாக உருவாக்கி உள்ள ‘கோவேக்சின்’ என்ற தடுப்பூசியை ஆகஸ்டு 15-ந் தேதி முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி சோதிப்பதற்கு வரும் 7-ந் தேதிக்குள் தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு, சோதனை தளங்களாக செயல்பட உள்ள மருத்துவ நிறுவனங்களுக்கும், ஆஸ்பத்திரிகளுக்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டாக்டர் பலராம் பார்கவா கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதம் கண்டிப்புடன் கூடிய தொனியில் இருந்ததாக விமர்சனம் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி காலக்கெடு நிர்ணயித்து துரித கதியில் வேலை வாங்குவதை விஞ்ஞானிகள் விமர்சித்துள்ளனர். பிரதமர் சுதந்திர தின உரையில் தடுப்பூசி குறித்த அறிவிப்பு வெளியிடுவதற்காக அவசரப்படுத்துவதாக அரசியல் ரீதியிலும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) நேற்று விரிவான அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

கொரோனா தடுப்பூசியை சோதிப்பதற்கான சோதனை தளங்களின் முதன்மை புலனாய்வாளர்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டாக்டர் பலராம் பார்கவா எழுதிய கடிதம், தேவையற்ற சிவப்பு நாடா நடைமுறையை (தாமதப்படுத்தும் கோப்பு நடைமுறை) வெட்டுவதற்காக, தேவையான எந்தவொரு செயல்முறையையும் புறந்தள்ளாமலும், தடுப்பூசி சோதனை பங்கேற்பாளர்களை தேர்வு செய்வதை விரைவுபடுத்தவும் எழுதப்பட்டதாகும்.

உலகளாவிய மற்ற அனைத்து தடுப்பூசிகளும் இதே போல அதிவேகமாக பரிசோதிக்கப்பட்டுள்ளன. மேலும், கோவேக்சின் தடுப்பூசியின் 1-வது மற்றும் 2-வது கட்ட பரிசோதனைகளை நடத்துவதற்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி, முன் மருத்துவ ஆய்வுகளில் இருந்து கிடைத்துள்ள தரவுகளை தீர ஆராய்ந்தே அனுமதி அளித்துள்ளார்.

இந்திய சந்தைகளில், புதிய உள்நாட்டு சோதனை கருவிகளின் அல்லது சாத்தியமான கொரோனா தொடர்பான மருந்துகளின் விரைவான அங்கீகாரத்தில் அல்லது அறிமுகப்படுத்துதலில் சிவப்பு நாடா ஒரு தடையாக மாற அனுமதிக்கப்படவில்லை. உள்நாட்டு தடுப்பூசி மேம்பாட்டு செயல்முறையும், மெதுவான கோப்பு நடைமுறையில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும்.

சோதனை கட்டங்களை விரைவாக முடிப்பதுதான் இதன் நோக்கம்.

இதனால், மக்கள் தொகை அடிப்படையிலான சோதனைகள் தாமதமின்றி தொடங்கப்படும்.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் அனைத்து தரவுகளையும் தீவிரமாக வகைப்படுத்தியபின்னர், தடுப்பூசி நம்பிக்கைக்கு உரியதாக தோன்றுவதால் அதன் மருத்துவ வளர்ச்சியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆதரிக்கிறது,

பெரிய அளவிலான பொது சுகாதார நலனில், நம்பகமான ஒரு தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை விரைவுபடுத்துவது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு முக்கியம் ஆகும்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் முன்னோடியில்லாத தன்மையையும், அதன் விளைவாக இயல்பு வாழ்க்கை பாதித்திருப்பதையும் சந்தித்து இருப்பதால், உலகமெங்கும் உள்ள மற்ற அனைத்து தடுப்பூசிகளும் விரைவான நடைமுறையில் சோதிக்கப்பட்டுள்ளன.

உலகளாவிய தொற்று நோய்க்கான தடுப்பூசி மேம்பாட்டு செயல்முறைகளை விரைவுபடுத்தும்போது, மனிதர்களுக்கு, விலங்குகளுக்கு சோதனைகள் இன்னொரு பக்கம் நடந்து கொண்டிருக்கும். அந்த வகையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சின் செயல்முறைகள் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க உள்ளது.

மருத்துவ ஆராய்ச்சியிலும், உலகளவில் மதிக்கப்படும் மற்றும் ஏற்றுக்கொள்ளப்படும் தடுப்பூசி மற்றும் மருந்து துறையிலும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உலகின் மிகவும் புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்றாகும். தடுப்பூசியில் சிறந்த நடைமுறைகளை கடுமையாக பின்பற்றி சோதனைகள் மேற்கொள்ளப்படும். தரவு பாது காப்பு கண்காணிப்பு வாரியத்தால் (டிஎஸ்எம்பி) அவை முறைப்படி ஆய்வு செய்யப்படும்.

பொதுவெளியில் விமர்சகர்களால் அவ்வப்போது எழுப்பப்படும் பிரச்சினைகள் வரவேற்கத்தக்கவை. அவை பின்னூட்ட வளையத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருப்பதால், இந்தியாவின் சிறந்த மருத்துவ நிபுணர்கள், ஆராய்ச்சி விஞ்ஞானிகள், அவர்களின் தொழில் திறன் அல்லது உயர்ந்ததை பின்பற்றுவதை இரண்டாம்தரமாக ஊகிக்கக்கூடாது.

இந்திய மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முதன்மையாக கருதுவதற்கு உறுதி கொண்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்