‘கொரோனா பாதிப்பு மோசமாகவில்லை என்ற எண்ணத்தை உருவாக்க அரசு முயற்சி’ - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

“கொரோனா பாதிப்பு மோசமாகவில்லை என்ற எண்ணத்தை உருவாக்க அரசாங்கங்கள் முயற்சிப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

Update: 2020-07-01 21:45 GMT
புதுடெல்லி,

கொரோனா நோய்த்தொற்று பரவலை தொடர்ந்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. ராகுல் காந்தி அவ்வப்போது பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் அது தொடர்பாக கலந்துரையாடி வருகிறார். உலக மருத்துவர்கள் தினமான நேற்று இந்தியாவைச் சேர்ந்த 4 நர்சுகளுடன் அவர் கலந்துரையாடினார்.

நியூசிலாந்தில் பணிபுரியும் அனு ரக்னத், ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் நரேந்திர சிங், இங்கிலாந்தில் பணியாற்றும் ஷெரில்மோள் புரவாடி மற்றும் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் பணியாற்றும் விபின் கிருஷ்ணனுடன் ராகுல் காந்தி 30 நிமிடங்கள் கலைந்துரையாடினார்.

அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:-

மருத்துவர்கள் தினத்தையொட்டி சுகாதார ஊழியர்களுக்கு எனது வாழ்த்துகளையும், ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன். பெருந்தொற்று நோயான கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றும் உன்னதமான பணியில் ஈடுபட்டுள்ள அவர்களை ‘அகிம்சை ராணுவம்‘ என்று சொல்லலாம்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் டாக்டர்களுக்கு சில பிரச்சினைகள் உள்ளன. டெல்லியில் உள்ள பல தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா பரிசோதனை நடத்த அனுமதிப்பதில்லை என்று அறிகிறேன்.

ஆனால் மற்றவர்கள் நினைப்பது போல் நிலைமை மோசமாக இல்லை என்ற எண்ணத்தை உருவாக்க அரசாங்கங்கள் முயற்சிக்கின்றன. ஆனால் பிரச்சினையை நாம் உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று நான் கருதுகிறேன். பிரச்சினையை ஏற்றுக்கொண்டு அதை எதிர்த்து நாம் உறுதியுடன் போராட வேண்டும்.

ஒரு தனியார் ஆஸ்பத்திரி டாக்டரிடம் நான் பேசிக் கொண்டிருந்த போது, கொரோனா தொற்று ஏற்பட்டவர்களை பரிசோதனை செய்யவில்லை என்றால் தங்களால் வேலை செய்ய முடியாத நிலைமை இருப்பதாக கூறினார். நோயாளிக்கு நோய்த்தொற்று இருக்கா? இல்லையா? என்று தெரியவில்லை என்றால் அவர்களை எங்கு வைத்து சிகிச்சை அளிப்பது என்பதும் எங்களுக்கு தெரியாமல் போய்விடும் என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே பரிசோதனைக்கு வந்திருப்பவர்களில் யாருக்கு நோய்த்தொற்று, யாருக்கு தொற்று இல்லை என்று உடனடியாக அறிந்து கொள்ளமுடியாத ஒரு குழப்பமான நிலையில் டாக்டர்கள் தங்கள் பணியை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. இதனால் அவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

டெல்லியில் தென்னிந்தியாவைச் சேர்ந்த 2 நர்சுகள் கொரோனாவால் உயிரிழந்தாகவும் மேலும் ஒரு எக்ஸ்ரே நிபுணர், எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் ஓய்வு பெற்ற டாக்டர் ஒருவர், மற்றும் ஒரு சுகாதார ஊழியரும் இறந்து இருக்கிறார்கள் என்றும், டெல்லி அரசு அறிவித்த ரூ.1 கோடி இழப்பீடு தொகை அவர்களுக்கு கிடைக்கவில்லை என்றும் கலந்துரையாடலின் போது விபின் கிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

இதைத்தொடர்ந்து, கொரோனா தொற்றால் உயிரிழந்த சுகாதார ஊழியர்களுக்கு டெல்லி அரசு அறிவித்தபடி நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம் எழுதம் எழுத இருப்பதாக கலந்துரையாடலின் போது ராகுல் காந்தி கூறினார்.

மேலும் செய்திகள்