இந்தியா-சீனா மோதலுக்கான காரணம் என்ன...? சீனா தனது தரப்பு உயிர் இழப்பை மறைப்பது ஏன்..?

இந்தியா-சீனா மோதலுக்கான காரணம் என்ன சீனா தனது தரப்பு உயிர் இழப்பை மறைப்பதற்கான காரணம் என்ன எனதகவல் வெளியாகி உள்ளது.

Update: 2020-06-18 10:43 GMT
புதுடெல்லி

இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது பதற்றமான சூழ்நிலை உருவாகி வரும் நிலையில், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

திங்கட்கிழமை நள்ளிரவில் இந்தியா மற்றும் சீனாவிற்கும் இடையே ஏற்பட்ட மோதலில், சுமார் 20-க்கும் மேற்பட்ட இந்திய இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.இந்தியா கொடுத்த பதிலடி தாக்குதலில் சீனா தரப்பில் பலியானோர் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 40 -க்கும் மேல் இருக்கும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

எங்கள் தரப்பில் உயிரிழப்புகளை குறித்து தகவலை வெளியிடப்போவது இல்லை என  சீனா கூறியது. சீனா ஏன் தனது கொல்லப்பட்ட வீரர்களின் விவரங்களை மறைக்கிறது என சந்தேகம் அனைவருக்கும் எழுந்தது. இதற்கிடையில், சீனாவின் இந்த நடவடிக்கை குறித்து ஒரு பெரிய உண்மை வெளியாகி உள்ளது. அமெரிக்காவுக்கு பயந்து சீனா தனது துருப்புக்களின் எண்ணிக்கையை மறைத்ததாக கூறப்படுகிறது.

தென் சீனா மார்னிங் போஸ்டின் அறிக்கையின்படி, சீனாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஒரு முக்கியமான சந்திப்பு இருக்க வேண்டும். சீனா முழு சம்பவத்தையும் குறைத்து மதிப்பிட முயன்றதைக் கண்டேன். இந்த மூலோபாயத்தின் கீழ், சீனா தனது உயிரிழப்புகளின் எண்ணிக்கையை வெளியிடவில்லை மற்றும் முழு விஷயத்திலும் அமைதியாக இருந்தது. இந்த மோதலில் இரு தரப்பு வீரர்களும் கொல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் தங்கள் துருப்புக்களின் எண்ணிக்கையை வெளியிடவில்லை.

சமீபத்திய ஆண்டுகளில் இந்திய - சீனா இடையே எல்லைப்பகுதியில் அவ்வப்போது மோதல், பிரச்சினை இருந்தாலும் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதில்லை.

ஆனால், சுமார் 53 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் இந்த உயிரிழப்பானது பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.

சுமார் 4056 கி.மீட்டர் அளவுக்கு இந்தியாவும் சீனாவும் எல்லையைப் பகிர்ந்துகொண்டிருக்கின்றன. இந்தியா-சீனா எல்லை ஜம்மு - காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்தராகாண்ட், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் வரை நீள்கிறது.இந்திய - சீனா எல்லைப் பகுதியானது கிழக்கு, மேற்கு, மத்திய என்று மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டிருக்கிறது.

இவற்றில் மேற்கு எல்லையான லடாக், மத்திய எல்லையான சிக்கிம், கிழக்கு எல்லைப் பகுதியான அருணாச்சலப் பிரதேசம் ஆகிய இடங்களில் தான் இரு தரப்புக்கும் பிரச்சினை அதிகமாகிவருகிறது.மேற்கே, உள்ள அக்சாய் சின் பகுதி தனக்குச் சொந்தமானது என்று இந்தியாவும் கிழக்கே உள்ள அருணாச்சலப் பிரதேசம் தனக்குச் சொந்தமானது என்று சீனாவும் உரிமை கொண்டாடி வருகின்றன.

கடந்த 1962-ஆம் ஆண்டு ஏற்பட்ட போரில் அக்சாய் சின் பகுதியைச் சீனா அடாவடியாக ஆக்கிரமித்துக்கொண்டது. அதன்பிறகு பின்வாங்கவே இல்லை. அக்சாய் சின் மீதான இந்தியாவின் உரிமையை நிராகரித்துவிட்டது சீனா.அதுமட்டுமின்றி, அருணாச்சலப் பிரதேசத்தை திபெத்தின் ஒரு அங்கம் என்றும் சீனா உரிமை கோரி வருகிறது.அருணாச்சலப் பிரதேச விவகாரத்தில் 1914-ல் பிரித்தானியா இந்தியா மற்றும் திபெத் பிரதிநிதிகள் கையெழுத்திட்ட மக்மோஹன் கோடு ஒப்பந்தத்தை இன்றுவரை சீனா ஏற்க மறுக்கிறது.

1914-ல் திபெத் தனி நாடாக இருந்தது. அதன்பிறகு 1950-ஆம் ஆண்டு சீனா திபெத்தை முழுவதுமாக கபளீகரம் செய்துவிட்டது. இரு நாடுகளுக்கும் இடையே இன்றுவரை சரியான எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு இறுதி செய்யப்படவில்லை. 1965- ல் நடந்த போருக்குப் பிறகு இந்திய ராணுவம், சீன இராணுவம் எந்த பகுதிகளில் நிலை கொண்டிருந்தார்களே அதை எல்லைக் கட்டுப்பாடு பகுதியாக இரு நாடுகளும் பின்பற்றி வருகின்றன.இந்த எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையும் சீன வீரர்கள் மதிக்காமல் அவ்வப்போது அத்துமீறி நுழைவதே பிரச்சனைக்கு காரணமாக அமைகின்றன.

இந்தியா - சீனா இடையேயான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடானது மலைகள், ஆறுகள், பனிப்பாறைகள், பனிப் பாலைவனங்கள், புல்வெளிகள் ஊடாகப் பணிக்கிறது.இந்தப் பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட இடங்களை இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி ரோந்துப் பணிகளை மேற்கொள்ளும்போது பிரச்சினை ஏற்படுகிறது.

தங்களது எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வரை இரு நாடுகளும் சாலை, பாலங்கள், முகாம்கள் அமைக்கின்றன. சீனா ஏற்கெனவே எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு விரைவாக செல்லும் வகையில் சாலைகள், பாலங்களை ஏற்படுத்திவிட்டது.

அதற்குப் பதிலடி அளிக்கும் இந்தியாவும் தற்போது எல்லைப் பகுதியில் தளவாடங்களை விரைவில் கொண்டுசெல்லும் வகையில் கட்டுமானங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்தக் கட்டுமானத்துக்குச் சீன எதிர்ப்பு தெரிவித்துசண்டையிட்டு வருகிறது.

இந்தியா 255 கி.மீட்டர் தொலைவிலான சாலையை லடாக் லே நகரிலிருந்து டர்புக், ஷியோக் வழியாக தவ்லத் பேக் ஓல்டி எனும் சீன எல்லையை ஓட்டிய பகுதி வரை அமைத்திருக்கிறது. இதன் மூலம் இந்தியாவால் மிக எளிதாக இராணுவத் தளவாடங்களை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வரை நகர்த்தமுடியும்.

மேலும் செய்திகள்