“ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் தாமதத்துக்கு அபராதம் கிடையாது” நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்வதில் தாமதம் ஆவதற்கு அபராதம் கிடையாது என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Update: 2020-06-12 22:45 GMT
புதுடெல்லி,

ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக, மத்திய நிதி மந்திரி தலைமையில் மாநில நிதி மந்திரிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் செயல்பட்டு வருகிறது.

இந்த கவுன்சிலின் 40-வது கூட்டம் நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார். மத்திய நிதித்துறை இணை மந்திரி அனுராக் தாக்குர், மாநில நிதி மந்திரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிவடைந்த பிறகு, நிர்மலா சீதாராமன் காணொலி காட்சி மூலம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து 2020-ம் ஆண்டு ஜனவரி வரையிலான காலத்துக்கு, ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்யாமல் இருப்பவர்களுக்கு சலுகை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, அவர்கள் வரியை முழுமையாக செலுத்தி இருந்தால், கணக்கை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டதற்கு அபராதம் கிடையாது. அதே சமயத்தில், வரி பாக்கியும் வைத்திருந்து, ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்கு அபராதத்தை குறைக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் சிபாரிசு செய்துள்ளது. அதனால், அவர்களுக்கு அதிகபட்சமாக ஒரு கணக்குக்கு ரூ.500 மட்டும் அபராதமாக விதிக்கப்படும். ஆனால், வருகிற ஜூலை 1-ந் தேதியில் இருந்து செப்டம்பர் 30-ந் தேதிக்குள் ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.

ரூ.5 கோடிவரை விற்றுமுதல் கொண்ட, சிறிய அளவிலான வரி செலுத்துவோருக்கும் சலுகை வழங்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங் களுக்கான கணக்குகளை அவர்கள் ஜூலை 6-ந் தேதிக்குள் தாக்கல் செய்தால், அவர்களுக்கு வட்டி விதிக்கப்படாது.

அதற்குள் தாக்கல் செய்யாவிட்டால், தாமதத்துக்கான வருடாந்திர வட்டி விகிதம் 18 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக குறைக்கப்படும். ஆனால், அவர்கள் செப்டம்பர் 30-ந் தேதிக்குள் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

கொரோனா தாக்கம் காரணமாக, தொழில் முனைவோருக்கு மேற்கண்ட சலுகைகள் அளிக்கப்படுகின்றன.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

மேலும் செய்திகள்