இந்தியாவில் பரவும் கொரோனா, எங்கிருந்து தோன்றியது? - பெங்களூரு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

இந்தியாவில் பரவும் கொரோனா எங்கிருந்து தோன்றியது என்பது குறித்து, பெங்களூரு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Update: 2020-06-09 23:00 GMT
பெங்களூரு, 

இந்தியாவில் பரவி வருகிற கொரோனா வைரஸ் தொற்று எங்கிருந்து வந்து பரவத்தொடங்கியது என்பது குறித்து பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குமார் சோமசுந்தரம், மைனக் மொண்டல், அங்கிதா லாவர்டே உள்ளிட்டோரை கொண்ட குழுவினர் ஆராய்ந்தனர்.

அவர்கள், 294 இந்திய கொரோனா வைரஸ் மரபணு வரிசையை ஆராய்ந்து பார்த்தனர்.

உலகளவில் நிகழும் விகாரங்களுடன் (ஸ்டிரெய்ன்ஸ்) ஒப்பிடும்போது, இந்திய கொரோனா வைரஸ் தொற்று மரபணு வரிசை வேறுபாட்டை தீர்மானிப்பதுதான் இந்த ஆய்வின் நோக்கம் ஆகும்.

அதில் இந்தியாவில் பரவி வருகிற கொரோனா வைரஸ், ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஓசியானியா என்றழைக்கப்படுகிற பசிபிக் பெருங்கடல் தீவு நாடுகள் மற்றும் தெற்காசிய பிராந்தியங்களில் தோன்றி வந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இந்த நாடுகள்தான் அதிகளவில் பயணம் மேற்கொள்ளப்பட்ட நாடுகள் என்று இந்த ஆராய்ச்சி குழுவினர் தெரிவித்தனர். இந்திய கொரோனா வைரஸ்கள், கூடுதலாக ஜி (50 சதவீதம்), ஐ (6.7 சதவீதம்) உயிரின கிளைகளால் (‘கிளேடு’களால்) செறிவூட்டப்பட்டவை ஆகும். 40 சதவீத மாதிரிகள், அறியப்படாத மரபணு வேறுபாடுகளை கொண்டுள்ளன எனவும் தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரசை பொறுத்தமட்டில், உலகமெங்கும் 71 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பரவினாலும், இந்தியாவை பொறுத்தமட்டில் 2.66 லட்சம் பேருக்குத்தான் இதுவரை பரவி இருக்கிறது. இந்தியாவில் குறைவான அளவுக்கு பரவ காரணம், நீண்ட கால ஊரடங்கும், தனிமனித இடைவெளியை பின்பற்றுதலும், கொரோனா நோயாளிகளை தீவிரமாக கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சைக்கு உட்படுத்துதலும், நோய் எதிர்ப்பு பாதுகாப்பு உள்ளதும், வைரஸ் விகார மாறுபாடுகளும்தான் காரணம் என இந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் செய்திகள்