கொரோனா பெருந்தொற்று; உலகளவில் கார்பன் டையாக்சைடு வெளியேற்றம் 17% குறைவு
கொரோனா பொருந்தொற்று காரணமாக உலகளவில் கார்பன் டையாக்சைடு வெளியேற்றம் 17% குறைந்துள்ளது.
கென்சிங்டன்,
சீனாவின் உகான் நகரில் முதன் முதலாகக் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகளை மிரட்டி வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து போன்ற வளம் பொருந்திய நாடுகளே கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்றன. கொரோனா வைரசுக்கு இன்னும் தடுப்பு மருந்துகள் கண்டறியப்படாததால், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதன் மூலமே, இந்த நோய்த்தொற்றின் சங்கிலித்தொடரை உடைக்க முடியும் என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இதனால், உலக நாடுகள் பலவும் கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்தின.
இந்தியா போன்ற வளரும் நாடுகளும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் சுமார் 50 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகளும் தொழில் நிறுவனங்களும் முடங்கியுள்ளன. இதனால், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளும் ஏறக்குறைய முற்றிலும் தடைப்பட்டுள்ளது. இதனால், பல ஆண்டுகளாக தொழிற்சாலை கழிவுகளால் அசுத்தமாகக் காட்சியளித்த முக்கிய நதிகள் சுத்தமாக காணப்படுகின்றன.
அதேபோல் கார்பன் டையாக்சைடு வெளியேற்றமும் உலகளவில் 17% குறைந்துள்ளது. ஆண்டின் இறுதியில், கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது நிகழாண்டு கார்பன் டையாக்சைடு வெளியேற்றம் 4 முதல் 7 சதவிகிதம் குறைவாக இருக்கும் இன்று சர்வதேச விஞ்ஞானிகள் குழு கணித்துள்ளது. 2-ஆம் உலகப் போருக்கு, கார்பன் டையாக்சைடு வெளியேற்றத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு இதுவாகத்தான் இருக்கப்போகிறது.
நடப்பு ஆண்டு முழுவதும் கடுமையான ஊரடங்கு பின்பற்றப்பட்டால் கார்பன் டையாக்சைடு வெளியேற்றம்7 சதவிகிதமாக குறையும். அதேவேளையில், விரைவில் ஊரடங்கு நீக்கப்படுமேயானால், கார்பன் டையாக்சைடு வெளியேற்றத்தில் 4 % மட்டுமே குறைவாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் குழு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவின் கார்படன் டையாக்சைடு வெளியேற்றம் மூன்றில் ஒரு பங்காக குறைந்தது. கார்பன் டையாக்சைடு வெளியேற்றத்தில் அதிக பங்கு வகிக்கும் நாடாகத் திகழும் சீனா, பிப்ரவரி மாதத்தில் கால் பங்கு அளவுக்கு குறைத்தது.
இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் முறையே 26 சதவிகிதம் முதல் 27 சதவிகிதம் வரை கார்பன் வெளியேற்றத்தை குறைத்துள்ளது. கொரோனா தொற்று இல்லாத சமயத்திலும், கார்பன் டையாக்சைடு வெளியேற்றத்தை உலக நாடுகள் கட்டுக்கும் வைத்திருக்கும் பட்சத்தில், பூமியின் வெப்ப நிலை 1.8 டிகிரி ( 1டிகிரி செல்சியஸ்) கூடுவதை தவிர்க்க முடியும்.எனினும், இந்த நிலை சர்வதேச அளவில் எட்டுவதற்கு வாய்ப்பு குறைவு என்று ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. கார்பன் டையாக்சைடு வெளியேற்றத்தில் ஏற்பட்டுள்ள சரிவில் 40 சதவிகிதம், ஊரடங்கு காரணமாக வாகனங்கள் குறைவாக இயக்கப்படுவதால் ஆகும் என ஆய்வு கூறுகிறது.
காலநிலை மாற்றம், புவி வெப்பமாதல் போன்ற உலகளாவிய பிரச்னைகளுக்கு முக்கிய காரணம் பசுமை இல்ல வாயுக்கள் அதிகமாக வெளியேற்றப்படுவதுதான். பசுமை இல்ல வாயுக்களிலேயே அதிகளவில் வெளியேற்றப்படுவது கார்பன் டை ஆக்ஸைடு. உலகம் முழுக்க பல்வேறு காலநிலை மாற்ற மாநாடுகளிலும் சரி ஆய்வுகளிலும் சரி கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து நிறைய விவாதிக்கப்படுகிறது. ஆனால், தொடர்ந்து வரும் ஆய்வு முடிவுகள் அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில்தான் அமைகின்றன. தொழிற்சாலைகள், வாகனங்கள், நிலக்கரி ஆலைகள், சமையல் புகை போன்றவை கார்பனை அதிகமாக வெளியேற்றுகின்றன.