அதிகாரிக்கு கொரோனா தொற்று: மத்திய உணவுத்துறை மந்திரி அலுவலகத்துக்கு ‘சீல்’
அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மத்திய உணவுத்துறை மந்திரியின் அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள கிருஷி பவன் கட்டிடத்தில் மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சகத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் அங்கு கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையில் பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதனால் அந்த கட்டிடத்தின் ஒரு பகுதியும், அங்குள்ள மத்திய உணவுத்துறை மந்திரி ராம் விலாஸ் பஸ்வானின் அலுவலகமும் மூடப்பட்டு நேற்று ‘சீல்’ வைக்கப்பட்டது. 2 நாட்களுக்கு அலுவலகம் மூடிபட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றும் அலுவலகம் இயங்காது.
ஏற்கனவே கடந்த மாதம் 28-ந் தேதி நிதி ஆயோக் அமைப்பின் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதால் அந்த அமைப்பின் அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 5-ந் தேதி சட்ட அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் சாஸ்திரி பவன் கட்டிடத்தின் ஒரு பகுதி ‘சீல்’ வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.