உத்தரபிரதேசத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற 6 லாரிகள் பறிமுதல்

உத்தரபிரதேசத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற 6 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2020-05-18 21:45 GMT
முசாபர்நகர், 

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்து செல்வதற்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் பல தொழிலாளர்கள் நடந்தும், பிற வாகனங்களில் ஏறியும் சொந்த ஊருக்கு பயணித்து வருகின்றனர். அவ்வாறு மேற்கொள்ளும் பயணம் பல இடங்களில் அவர்களின் உயிருக்கே ஆபத்தாக மாறியது. குறிப்பாக உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் லாரியில் சென்ற 25 தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அண்டை மாநிலங்களில் இருந்து வேறு மாநிலங்களுக்கு செல்பவர்கள் உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் வழியாகத்தான் பயணிக்க வேண்டும். 

இதனால் அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு, தொழிலாளர்கள் வேறு வாகனங்களில் பயணிக்கிறார்களா? என கண்காணித்து வந்தனர். அந்த வகையில் அங்குள்ள மீரான்பூர் பகுதியில் உள்ள சோதனைச்சாவடி வழியாக வந்த 6 கன்டெய்னர் லாரிகளை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அதில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் அரியானாவின் யமுனா நகரில் இருந்து பீகார் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களுக்கு செல்வதாகவும், இதற்காக ஒவ்வொருவரும் லாரி உரிமையாளர்களுக்கு தலா ரூ.2,500 கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து தொழிலாளர்களை சிறப்பு முகாமில் தங்க வைத்த போலீசார், விரைவில் அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிவித்தனர். அந்த 6 கன்டெய்னர் லாரிகளையும் பறிமுதல் செய்து, உரிமையாளர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்