மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 1,068 ஆக உயர்வு
நாட்டிலேயே கொரோனா பாதிப்புக்கு மராட்டியத்தில் பலி எண்ணிக்கை 1,068 ஆக உயர்வடைந்து உள்ளது.
புனே,
இந்தியாவில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நாட்டில் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு நாளை வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனினும், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. பொதுமக்கள் தங்களை காத்து கொள்ள ஊரடங்கு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். கடந்த 4ந்தேதியில் இருந்து நாடு முழுவதும் பல இடங்களில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
நாட்டில் அதிக அளவாக மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 29 ஆயிரத்து 100 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. பலி எண்ணிக்கை 1,019ல் இருந்து 1,068 ஆக உயர்ந்து உள்ளது. 6 ஆயிரத்து 564 பேர் பாதிப்பில் இருந்து விடுபட்ட நிலையில் வீடு திரும்பி உள்ளனர். மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே, தொற்று அதிகமுள்ள மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் வரும் 31ந்தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
இந்தியாவில், அருணாசல பிரதேசம் (ஒருவர்), அந்தமான் நிகோபார் தீவுகள் (33 பேர்) மற்றும் மிசோரம் (ஒருவர்) ஆகியவை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு முழு அளவில் விடுபட்டு உள்ளன.
மராட்டியத்திற்கு அடுத்து பலி எண்ணிக்கையில் குஜராத் 2வது இடத்திலும் (606), மத்திய பிரதேசம் 3வது இடத்திலும் (239), மேற்கு வங்காளம் 4வது இடத்திலும் (225) மற்றும் ராஜஸ்தான் 5வது இடத்திலும் (125) உள்ளன.