“குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவியாக அமையும்” - நிர்மலா சீதாராமன் அறிவிப்புக்கு மோடி வரவேற்பு
கொரோனா வைரசால் பாதித்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகளை பிரதமர் மோடி வரவேற்றார். இது குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவியாக அமையும் என அவர் குறிப்பிட்டார்.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத எதிரியால், இந்திய பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை மீட்டெடுக்கும் வகையில் மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடி சலுகை திட்டங்களை செயல்படுத்தும் என பிரதமர் மோடி நேற்று முன்தினம் டெலிவிஷனில் நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது குறிப்பிட்டார்.
அந்த வகையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், டெல்லியில் நேற்று இது தொடர்பான முக்கிய அறிவிப்புகள் சிலவற்றை வெளியிட்டார்.
அப்போது அவர் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பிணையின்றி ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிடடார். இதனைக்கொண்டு 45 லட்சம் சிறுதொழில் நிறுவனங்கள் பலன் அடைய முடியும் எனவும் அவர் கூறினார்.
நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்பை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.
இதையொட்டி அவர் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், “நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகள், தொழில் நிறுவனங்கள் குறிப்பாக குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதில் நீண்ட தொலைவுக்கு செல்லும்” என்று குறிப்பிட்டுள்ளார்.