நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை - ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படும்; ரூ.20 லட்சம் கோடி சிறப்பு திட்டம்

நாடு முழுவதும் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படும் என்று நாட்டு மக்களுக்கு டெலிவிஷனில் உரையாற்றிய பிரதமர் மோடி அறிவித்தார். ரூ.20 லட்சம் கோடி சிறப்பு திட்டத்தையும் அவர் வெளியிட்டார்.

Update: 2020-05-13 00:15 GMT
புதுடெல்லி,

மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை களை எடுத்து வந்த போதிலும், இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்புகளும், உயிர் இழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. என்றாலும் வேலைவாய்ப்பு, நாட்டின் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஊரடங்கு தொடர்பான பல கட்டுப் பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன.

மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வருகிற 17-ந்தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஊக்கம் அளிப்பது பற்றியும் பிரதமர் மோடி நேற்று முன்தினம் மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று தெலுங்கானா, அசாம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களின் முதல்-மந்திரிகள் கேட்டுக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி நேற்று இரவு 8 மணிக்கு தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்தியாவில் கொரோனா பரவியதை தொடர்ந்து, அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது இது 5-வது தடவை ஆகும். அப்போது ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படும் என்பதை தெரிவித்தார்.

அவர் பேசுகையில் கூறியதாவது:-

உலக நாடுகள் கொரோனா நோய்த்தொற்றை எதிர்த்து கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக போரிட்டு வருகின்றன. அனைத்து நாடுகளிலும் 42 லட்சத்துக்கும் மேலாக மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2.75 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.

இந்தியாவிலும் பல குடும்பங்களில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து உள்ளனர். அனைவரின் சார்பாக வேதனையை பகிர்ந்து கொள்கிறேன். இந்த நெருக்கடி மனித இனம் இதுவரை நினைத்துப்பார்க்காத, கேள்விப்படாத ஒன்று. நம்மை நாமே பாதுகாத்துக்கொண்டு மற்றவர்களையும் பாதுகாக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதில் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். பாதுகாப்புடன் முன்னேறிச்செல்வது அவசியம் ஆகும். இந்த நெருக்கடியான காலகட்டத்தில் நாம் தற்சார்புடன் இருக்க வேண்டும்.

இதுதான் நாம் முன்னேறுவதற்கான ஒரே வழி. இந்தியாவின் தற்சார்புத் தன்மை உலகின் மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் சமாதானத்தில் அக்கறை கொண்டு உள்ளது.

21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கு சொந்தமானது. 21-ம் நூற்றாண்டு இந்தியா என்னும் கனவு மெய்ப்பட நாம் அனைவரும் இந்தியாவின் தற்சார்புத் தன்மையை உறுதிப்படுத்துவதாகும்.

குஜராத்தின் கட்ச் பகுதியில் பூகம்பம் ஏற்பட்ட போது அந்த மக்கள் அபாரமான மன உறுதியுடனும் தன்னம்பிக்கையுடனும் மீண்டும் தங்கள் சொந்த காலில் நிற்கத் தொடங்கினார்கள். இப்போது அதே போன்ற மன உறுதி நாம் இந்த காலகட்டத்தில் தற்சார்புடன் நிற்பதற்கு தேவைப்படுகிறது.

தற்சார்பு என்பதற்கான பொருள் உலக அளவில் தற்போது மாற்றம் அடைந்து உள்ளது. ஒரு நாடு தற்சார்புடன் திகழ்வது என்பது அந்த நாடு சுயநலத்துடன் இயங்குவது என்று அர்த்தம் கிடையாது. இந்தியாவின் பண்பாடு உலகத்தை ஒரு குடும்பமாக கருதுவது. இந்தியாவின் முன்னேற்றம் என்பது இந்த உலகத்தின் முன்னேற்றத்தின் ஒரு பகுதியாக விளங்குகிறது. மனித இனத்தின் முன்னேற்றத்துக்கு இந்தியா தன் முழுமையான பங்களிப்பை அளிக்கும் என்று உலக நாடுகள் உறுதியாக நம்புகின்றன.

நெருக்கடியை ஒரு வாய்ப்பாக மாற்றுவதற்கான உதாரணத்தை இந்தியா சாதித்து காட்டி உள்ளது. இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று பரவ தொடங்கிய போது இங்கு நோய்த்தொற்று பாதுகாப்பு உடை ஒன்று கூட தயாரிக்கப்படவில்லை. வெகுசில ‘என்95’ பாதுகாப்பு முகக்கவசங்களே கிடைத்தன. இப்போது இந்தியாவில் 2 லட்சம் நோய்த்தொற்று பாதுகாப்பு உடைகளும், 2 லட்சம் ‘என்95’ பாதுகாப்பு முகக்கவசங்களும் தினமும் தயாரிக்கப்படுகின்றன.

பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. இந்த சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்கு, தொழிலாளர்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பு அரணாக இருக்கும்.

தற்சார்புடன் இயங்கும் நம் நாடு 5 தூண்களின் மீது உறுதியாக நிற்கும். சிறு சிறு மாற்றங்கள் என்று இல்லாமல் மிகப்பெரும் பாய்ச்சலுடன் முன்னேறும் நம்முடைய பொருளாதாரம், இந்தியாவின் அடையாளமாக விளங்கும் உள்கட்டுமானம், 21-ம் நூற்றாண்டின் தொழில் நுட்பத்தின் துணையுடன் நிற்கும் சமூக கட்டுமானம், தற்சார்புள்ள இந்தியாவின் மூல சக்தியாக விளங்கும் துடிப்புள்ள மக்கள் தொகை, முழு அளவில் பயன்பாட்டில் உள்ள தேவை மற்றும் வழங்குதல் ஆகியவை நம்முடைய 5 தூண்களாகும். நம் தேவைகளை பூர்த்தி செய்யும் உற்பத்தியாளர்கள் மற்றும் துறைகளை நாம் வலிமைப்படுத்த வேண்டும்.

இந்த உலகத்துக்கு யோகாவை இந்தியா கொடையாக வழங்கி இருக்கிறது. இந்தியாவை பற்றிய உலகத்தின் பார்வை மாறி இருக்கிறது. நம் திறமையின் மீது உலகம் நம்பிக்கை வைத்து இருக்கிறது. உலக நலனின் இந்தியா அக்கறை கொண்டு இருக்கிறது.

இந்தியாவில் சிறந்த வளங்களும், திறமைகளும் உள்ளன. சிறந்த பொருட்களை நாம் உற்பத்தி செய்கிறோம், அதை மக்களிடம் கொண்டு சேர்க்க சிறப்பான வழிகளும் நம்மிடம் உள்ளன. இந்தியாவின் வளர்ச்சி உலகத்தின் வளர்ச்சிக்கு வித்திடும்.

‘ஆத்மநிர்பர் பாரத் அபியான்’ அதாவது தன்னிறைவு பெற்ற இந்தியா திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் ரிசர்வ் வங்கி மூலம் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் ஆகும். பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும். இது குறித்து நிதி மந்திரி நாளை (அதாவது இன்று) விரிவான தகவல்களை வெளியிடுவார்.

ஒவ்வொரு இந்தியனும் உள்நாட்டு தயாரிப்புகளுக்காக குரல் கொடுக்க வேண்டும். நம் உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குவது மட்டுமின்றி அதுபற்றி பெருமையாகவும் பேசவேண்டும்.

கொரோனா நம்முடன் நீண்ட நாட்கள் இருக்கும் என்று விஞ்ஞானிகளும், நிபுணர்களும் கூறுகிறார்கள். 4-வது முறையாக ஊரடங்கை நீட்டிப்பது குறித்து 18-ந்தேதிக்கு முன் அறிவிக்கப்படும். மாநிலங்கள் தெரிவித்துள்ள யோசனைகளின் அடிப்படையில் இதுபற்றி அறிவிக்கப்படும். இந்த ஊரடங்கு நீட்டிப்பு புதிய வழிமுறைகளுடன் முந்தைய ஊரடங்குகளை விட வித்தியாசமானதாக இருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

மேலும் செய்திகள்