12 நாட்களில் 542 சிறப்பு ரெயில்கள் இயக்கம்; புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 6½ லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்

நேற்று வரை இயக்கப்பட்ட 542 ரெயில்கள் மூலம் 6½ லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர்.

Update: 2020-05-12 21:04 GMT
புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பிற மாநிலங்களில் வேலை செய்து வந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வருமானம் இன்றி அவதி அடைந்து வந்தனர். இதனால் அவர்களை சொந்த ஊருக்கு அழைத்து செல்வதற்காக ஒவ்வொரு மாநிலங்களில் இருந்தும் இந்த மாதம் 1-ந்தேதியில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் நேற்று வரை மொத்தம் 542 ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 6½ லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர்.

24 பெட்டிகள் கொண்ட ரெயிலில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு இதுவரை சுமார் 1,200 பயணிகள் மட்டுமே ஏற்றிச் செல்லப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் ஒவ்வொரு ரெயிலிலும் 1,700 பயணிகள் ஏற்றிச் செல்லப்படுகின்றனர். இதற்கு முன்பு இந்த ரெயில் இடையில் எந்த நிறுத்தங்களிலும் நிறுத்தப்படாமல் இயக்கப்பட்ட நிலையில், இனிமேல் ரெயில் எங்கு செல்கிறதோ அந்த மாநிலத்தில் உள்ள 3 ரெயில் நிலையங்களில் சிறப்பு ரெயில் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இனி ஒவ்வொரு நாளும் 100 சிறப்பு ரெயில்களை இயக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்