காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை: 2 ராணுவ அதிகாரிகள் உள்பட 5 பாதுகாப்பு படையினர் பலி

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ அதிகாரிகள் உள்பட 5 பாதுகாப்பு படையினர் பலியானார்கள். 2 பயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

Update: 2020-05-03 22:45 GMT
ஸ்ரீநகர், 

காஷ்மீர் யூனியன் பிரதேசம் குப்வாரா எல்லைப்புற மாவட்டம் ஹந்த்வாரா என்ற இடத்தில் ஒரு வீட்டுக்குள் புகுந்த பயங்கரவாதிகள், அங்கு வசிக்கும் குடும்பத்தினரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, காஷ்மீர் போலீசின் சிறப்பு நடவடிக்கை குழு ஆகியவை கூட்டாக அங்கு விரைந்தன.

அந்த வீடு சுற்றி வளைக்கப்பட்டது. 5 ராணுவ வீரர்களும், ஒரு போலீஸ்காரரும் அந்த வீட்டுக்குள் நுழைந்து, பிணைக்கைதிகளாக பத்திரமாக வெளியேற்றினர். அப்போது, பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அவர்களுக்கு பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்தனர்.

இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், 2 ராணுவ அதிகாரிகள், 2 ராணுவ வீரர்கள், ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் பலியானார்கள். பயங்கரவாதிகள் தரப்பில் 2 பேர் உயிரிழந்தனர்.

கர்னல் அந்தஸ்து ராணுவ அதிகாரி அசுதோஷ் ராணா, மேஜர் அந்தஸ்து அதிகாரி அனுஜ் சூத், ராணுவ வீரர்கள் ராஜேஷ், தினேஷ், சப்-இன்ஸ்பெக்டர் ஷகீல் காஜி ஆகியோர் பலியானவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. பலியான 4 ராணுவத்தினரும் 21 ராஷ்டிரீய ரைபிள்ஸ் படைப்பிரிவை சேர்ந்தவர்கள் ஆவர்.

இதற்கிடையே, 5 பேர் பலியானதற்கு ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஹந்த்வாராவில் 5 பாதுகாப்பு படையினர் பலியான தகவல் எனக்கு வேதனை அளிக்கிறது. பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அவர்கள் மிகவும் துணிச்சலாக செயல்பட்டனர். நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த அவர்களை மறக்க மாட்டோம். அவர்களது குடும்பத்தினருடன் இந்தியா தோளோடு தோள் நிற்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்