கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா வலுவாக போராட 7 டன் மருத்துவ பொருட்களை ஐக்கிய அரபு அமீரகம் அனுப்பியது

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக இந்தியா வலுவாக போராடுவதற்கு வசதியாக ஐக்கிய அரபு அமீரகம் 7 டன் மருத்துவ பொருட்களை அனுப்பியது.

Update: 2020-05-02 23:08 GMT
புதுடெல்லி, 

இந்தியா உள்ளிட்ட 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த கண்ணுக்குத் தெரியாத எதிரிமீது உலக நாடுகள் ஒன்றிணைந்து மாபெரும் போர் நடத்தி வருகின்றன.

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மிக நீண்ட ஊரடங்கு போடப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளுக்கு முடங்கி இருந்து சமூக இடைவெளியை பின்பற்றி வருகின்றனர்.

இந்தியா, இதில் இன்னும் வலுவாக போராடுவதற்கு ஏற்ற வகையில் ஐக்கிய அரபு அமீரகம் 7 டன் மருத்துவ பொருட்களை நேற்று அனுப்பி வைத்துள்ளது.

இது குறித்து டெல்லியில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தூதர் அகமது அப்துல் ரகுமான் அல்பன்னா கூறி இருப்பதாவது:-

கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா வலுவாக போராட ஏற்ற விதத்தில் 7 டன் மருத்துவ பொருட்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இது கொரோனா வைரசுக்கு எதிரான போரில் 7 ஆயிரம் மருத்துவ பணியாளர்களுக்கு உதவியாக இருக்கும்.

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த முற்படும் நாடுகளுக்கு முக்கியமான ஆதரவினை வழங்குவதற்கு ஐக்கிய அரபு அமீரகம் கடமைப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்தியாவுக்கு எங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் உதவி என்பது, நாம் இருவரும் பல்லாண்டு காலமாக பகிர்ந்து கொண்டு வந்துள்ள ஆழமான மற்றும் சகோதரத்துவ உறவை அங்கீகரிப்பதாகும்.

கொரோனா வைரஸ் தொற்றை எதிர்ப்பது என்பது முதன்மையான, உலகளாவிய அக்கறை ஆகும். இதில் ஐக்கிய அரபு அமீரகம் மற்ற நாடுகளின் முயற்சிகளை வலுப்படுத்தும் நம்பிக்கையில் செயல்படுகிறது.

இதுவரை ஐக்கிய அரபு அமீரகம் 34 நாடுகளுக்கு 348 டன்களுக்கும் அதிகமான மருத்துவ பொருட்களை அனுப்பி உள்ளது. இது 3 லட்சத்து 48 ஆயிரம் மருத்துவ பணியாளர்களுக்கு உதவியாக அமையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்