தப்லீக் ஜமாத் தலைவர் பதிலில் அதிருப்தி: 5- வது நோட்டீஸ் அனுப்ப போலீசார் முடிவு
தப்லீக் ஜமாத் தலைவர் பதிலில் போலீசாருக்கு திருப்தி இல்லாததால் அவருக்கு 5- வது நோட்டீஸ் அனுப்ப டெல்லி முடிவு செய்து உள்ளனர்,
புதுடெல்லி
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பாதிப்பை தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு சமூக விலகல் கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத்தில் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றாகக் கூடியிருந்தனர். இதையடுத்து அவர்களை போலீஸார், சுகாதாரத்துறையினர் அப்புறப்படுத்திய நிலையில் அங்கிருந்தவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தினர். இதில் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதும், பலருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததும் தெரியவந்தது.
இதை தொடர்ந்து தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா சாத் கந்தால்வி மீது அரசாங்க உத்தரவுகளை மீறியதாக தொற்று நோய்கள் சட்டம் மற்றும் ஐபிசி ஆகியவற்றின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ்போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா சாத்தை டெல்லி காவல்துறை குற்றப்பிரிவு போலீசார் 4 முறை அழைத்து விசாரணை நடத்தினர். ஆனால் அவரது பதில் திருப்தி இல்லாததால் அவருக்கு 5-வது நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்து உள்ளனர்.
நான்காவது விசாரணையில் புலனாய்வு நிறுவனம் மார்க்கஸின் வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்ட வீடியோக்கள் குறித்த விசாரணை நடத்தியது. இருப்பினும், குற்றப்பிரிவின் அறிவிப்புக்கு எதிராக மதத் தலைவர் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக மவுலானா சாதின் மூன்று மகன்களையும் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தப்லீக் ஜமாத் மற்றும் வளைகுடா நாடுகளுடன் தொடர்புடைய பல வங்கிக் கணக்குகளுக்கு இடையே கோடி ரூபாய் பரிவர்த்தனை நடந்ததாக குற்றப்பிரிவு போலீசார் அமலாக்க இயக்குநரகத்திற்கு அறிவித்தனர். பரிவர்த்தனைகளில் ஈடுபட்டவர்கள் நிஜாமுதீன் மார்க்கஸுடன் தொடர்புடையவர்கள் என்றும், மவுலானா சாத் உடன் நெருக்கமானவர்கள் என்றும் கூறி உள்ளது.