மே 3 ஆம் தேதி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விமானப்படை விமானங்கள் பறக்கும்: முப்படை தலைமை தளபதி
ஆயுதப்படைகள் சார்பில் கொரோனா போராளிகளுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறோம் என்று முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவதளபதி நரவானே, விமானப்படை தளபதி பதூரியா மற்றும் கடற்படை தளபதி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது முப்படைகளின் தலைமைத்தளபதி பிபின் ராவத் கூறியதாவது:
“ஆயுதப்படைகள் சார்பில் கொரோனா போராளிகளுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறோம்.கொரோனா தடுப்பில் ஈடுபட்டவர்களை கவுரவப்படுத்தும் விதமாக, மே 3-ல் காஷ்மீர் முதல் குமரி வரை விமானப்படை விமானங்கள் பறக்கும்.
ஹெலிகாப்டர்கள் மூலமாக மருத்துவமனைகள் மீது மலர் தூவப்படும். கடற்படை சார்பில் கடலில் கப்பல்கள் அணிவகுப்பு நடத்தப்படும். பெரும்பாலான மாவட்ட மருத்துவமனைகள் முன்பு ராணுவம் சார்பில் அணிவகுப்பு பேண்ட் வாத்திய இசைநிகழ்ச்சி நடத்தப்படும்” என்றார்.