கொரோனா வைரசுக்கு எந்த சமுதாயம் மீதும் முத்திரை குத்தாதீர்கள் - பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுரை

கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணம் என எந்த சமுதாயம் மீதோ, பகுதி மீதோ முத்திரை குத்தாதீர்கள் என்று பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுரை கூறியுள்ளது.

Update: 2020-04-09 00:01 GMT
புதுடெல்லி,

டெல்லியில், நிஜாமுதின் பகுதியில் நடந்த ஒரு மத மாநாட்டில் பங்கேற்ற நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த மதத்தினர்தான் கொரோனா பரவல் அதிகரிக்க காரணம் என்று சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

மேலும், கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களை தாக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், பொதுமக்களுக்கு அறிவுரை கூறும்வகையில், மத்திய சுகாதார அமைச்சக இணையதளத்தில் மத்திய அரசு நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணம் என எந்த சமுதாயம் மீதோ, பகுதி மீதோ முத்திரை குத்தாதீர்கள். சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற தவறான கண்ணோட்டம் பரப்பப்படுகிறது.

தொற்றுநோய் பரவலின்போது, இத்தகைய அச்சமும், கவலையும் ஒரு குறிப்பிட்ட சமுதாயம் மீது வெறுப்புணர்வை உண்டாக்கி விடும். இறுதியாக, தேவையற்ற சமூக பதற்றத்துக்கு வழிவகுத்து விடும்.

எனவே, பாரபட்ச அணுகுமுறைகளை தடுப்பது இப்போது அவசர தேவையாகும். சுகாதார விழிப்புணர்வு பெற்ற ஒரே சமுதாயமாக நாம் நிமிர்ந்து நிற்போம்.

கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள், போலீசார் ஆகியோர் மூலம் கொரோனா பரவும் என்ற அச்சத்தில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல்கள் வந்துள்ளன.

அவர்கள் எல்லாம் உங்களுக்கு உதவவே பணியாற்றி வருகிறார்கள். எனவே, சுகாதார பணியாளர்கள் மீதோ, துப்புரவு பணியாளர்கள், போலீசார் மீதோ தாக்குதல் நடத்தாதீர்கள். பாரபட்சமாக நடத்தாதீர்கள்.

கொரோனா தாக்கி குணமடைந்தவர்கள் கூட பாரபட்சமாக நடத்தப்படுவதாக தகவல்கள் வருகின்றன. அதையும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்