அத்தியாவசிய பொருளை கொண்டு செல்லும் வாகனங்களின் காலாவதியான பெர்மிட், உரிமம் ஜூன் 30-ந் தேதிவரை செல்லும் - மத்திய அரசு அறிவிப்பு
அத்தியாவசிய பொருளை கொண்டு செல்லும் வாகனங்களின் காலாவதியான பெர்மிட், உரிமம் உள்ளிட்ட போக்குவரத்து ஆவணங்கள் ஜூன் 30-ந் தேதிவரை செல்லும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
அனைத்து மாநில டி.ஜி.பி, போக்குவரத்து அதிகாரிகளுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
‘கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடெங்கும் ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக சில முக்கிய சரக்குகளை கொண்டு செல்ல சில வாகன போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அரசின் போக்குவரத்து அலுவலகங்கள் மூடப்பட்டு விட்டதால், உரிமம், எப்.சி., பெர்மிட் போன்ற சில ஆவணங்களை புதுப்பிக்க முடியவில்லை என்ற கருத்து மக்களிடம் இருந்து வரப்பெற்றுள்ளது.
எனவே கடந்த பிப்ரவரி 1-ந் தேதி முதல் காலாவதியாகின்ற ஓட்டுனர் உரிமம், பெர்மிட்டுகள் மற்றும் வாகன பதிவு உள்ளிட்ட எந்தவித ஆவணங்கள் செல்லுபடி ஆகும் காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆவணங்களின் செல்லுபடியாகும் காலம் ஜூன் 30-ந் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது.
தகுதிநிலை சான்று, பெர்மிட்டுகள் (அனைத்து வகை), ஓட்டுனர் உரிமம், பதிவுச்சான்று மற்றும் மோட்டார் வாகன விதிகளின் கீழ் தேவைப்படும் மற்ற ஆவணங்களும் இதில் அடங்கும்.
அனைத்து மாநிலங்களையும் இந்த ஆலோசனையின் அவசியத்தைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். அப்போதுதான் பொதுமக்களுக்கு அத்தியாவசியமான சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள வாகன ஓட்டுனர்கள் மற்றும் நிறுவனங்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகாமலும் சிரமம் இல்லாமலும் செயல்பட முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இதுகுறித்து போக்குவரத்து ஆணையர் தென்காசி ஜவஹர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஊரடங்கு உத்தரவினால் எப்.சி., பெர்மிட், ஓட்டுனர் உரிமம், பதிவுச் சான்று போன்ற ஆவணங்களை புதுப்பிக்க முடியாமல் இருக்கும் வாகனங்கள் குறித்த ஆணையை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. கடந்த பிப்ரவரி 1-ந் தேதி முதல் வரும் ஜூன் 30-ந் தேதிவரை இந்த ஆவணங்கள் காலாவதியாகும் வாகனங்களுக்கான அறிவிப்பு அதுவாகும்.
எனவே அப்படிப்பட்ட வாகனங்களுக்கான ஆவணங்களை ஜூன் 30-ந் தேதிவரை செல்லத்தக்கதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத வேண்டும்.
போக்குவரத்து வாகனங்கள், டாக்சி, பஸ் போன்ற வர்த்தக வாகனங்கள் தற்போது இயங்காமல் இருக்கும் நிலையில், வரிச் சலுகைகள் தொடர்பாக வி.ஏ.எச்.ஏ.என். என்ற இணையதளத்தின் மூலம் பயன் பெறலாம்.
எனவே இந்த இக்கட்டான சூழ்நிலையில் அத்தியாவசிய சேவையாற்றி கொண்டிருக்கிற போக்குவரத்து வாகனங்களைச் சேர்ந்தவர்கள், மற்ற நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு துன்பம் ஏற்படாத வகையில் மத்திய அரசின் பரிந்துரையை முழுமையாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.