கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவது "கவலைக்குரிய விஷயம்"- வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது ஒரு "கவலைக்குரிய விஷயம்" என்று வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

Update: 2020-03-12 09:46 GMT
படம் : ANI




புதுடெல்லி

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்து உள்ளது. இதனை  மத்திய சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வ அறிவித்து உள்ளது.

இந்தியர்கள் - 56, வெளிநாட்டினர் - 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவு அமைச்சர்  எஸ்.ஜெய்சங்கர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் நெருக்கடி ஒரு தீவிரமான பிரச்சினை. இந்தியா-ஈரான் இருதரப்பு  அதிகாரிகளும்  அந்தந்த நாட்டு குடிமக்களை மீட்பதில் பேசி வருகின்றனர்.

சீனாவின் வுகானில் தோன்றிய வைரஸ் பரவுவதால் உலகின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றான ஈரானில் மராட்டியம்  மற்றும் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த 1,100 யாத்ரீகர்கள் மற்றும் 300 மாணவர்கள் உட்பட சுமார் 6,000 இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். முதல் கட்ட  கவனம் பெரும்பாலும்  சிக்கித் தவிக்கும் யாத்ரீகர்களைத் திரும்பக் கொண்டுவருவதாகும்.

ஈரானின் குவாம் நகரில் சிக்கியுள்ள பெரும்பாலான இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை வெளியுறவுத்துறை தொடங்கி விட்டது. 529 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 229 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஈரானிய நடை முறை நீட்டிக்கப்பட்டுள்ளதால் இந்தியர்களை வெளியேற்றுவதில் செயல்பாட்டு தடைகள் உள்ளன.

ஈரானில் சிக்கியுள்ள இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக உள்ளதை  அந்த நாட்டின் வெளியுறவுத்துறை உறுதி செய்துள்ளது.

உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைப்பதில் மீனவர்களுக்கு சிக்கல் இருக்கிறது. இந்திய தூதரக அதிகாரிகள், தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள்.

ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களிடம்  எடுக்கப்பட்ட மாதிரிகளை இந்தியா பரிசோதித்து வருகிறது. விரைவில் அவர்களை வெளியேற்றுவதற்காக குறைந்த எண்ணிக்கையிலான வணிக விமானங்களை இயக்குவோம்.

மீனவர்களுக்கு உதவ உதவி மையம் ஒன்று அமைக்கப்படும். இந்திய மீனவர்களுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தூதரகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார். 

அதுபோல் இத்தாலியில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மருத்துவக் குழு அனுப்பப்பட உள்ளதாக கூறிய அவர், கொரோனா தொற்று அல்லாதவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் செய்திகள்