ஆள்காட்டி விரலால் ஜாரை தூக்கி உலக சாதனை படைத்த மாற்றுத்திறனாளி பெண்
ஆள்காட்டி விரலால் 1.25 கிலோ எடை கொண்ட ஜாரை தூக்கி உலக சாதனை படைத்த மாற்றுத்திறனாளி பெண் ‘முடியாதது என்று எதுவும் இல்லை’ என நிரூபித்து உள்ளார்.
கொச்சி,
சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களுக்கான உரிமை மற்றும் சமத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் இந்த தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ‘முடியாதது என்று எதுவும் இல்லை’ என நிரூபிக்கும் வகையில் கேரள பெண் ஒருவர் சாதனை படைத்து உள்ளார்.
கேரளாவின் கொச்சி நகரை சேர்ந்தவர் அஞ்சு ராணி ஜாய். மாற்றுத்திறனாளி பெண்ணான இவர், சக்கரநாற்காலி உதவியுடனேயே பல்வேறு இடங்களுக்கும் சென்று வருகிறார்.
இவருக்கு என தனித்திறன்கள் உள்ளன. தனது ஆள்காட்டி விரல்களை கொண்டு அதிக எடை கொண்ட ஜார்களை மிக இலகுவாக மேலே தூக்குகிறார். அவர் தனது இரண்டு ஆள்காட்டி விரல்களை ஜார்களின் மீது தனித்தனியே வைக்கிறார். பின்னர், நாம் நமது கைகளால் தூக்குவது போன்று, அவற்றை ஒன்றரை நிமிடங்கள் தூக்கி வைத்து உலக சாதனையும் படைத்து உள்ளார்.
இதற்காக கேரள அரசு விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளையும் அவர் வென்றுள்ளார். இது தவிர்த்து ஒரே நேரத்தில், வழக்கம்போல் ஒரு கையால் எழுத்துகளை எழுதவும், மற்றொரு கையால் கண்ணாடியில் தெரியும் எழுத்துகள் போன்று எழுதவும் திறன் பெற்றுள்ளார்.
அவர் தனது சாதனை பயணம் பற்றி கூறும்பொழுது, மற்றவர்களை விட மாறுபட்டவள் என தெரிந்தபொழுது நான் அதிக வருத்தமடைந்தேன். பின்பு எனது வருங்காலம் பற்றி யோசித்தேன். இதில் இருந்தே எனது பயணம் தொடங்கியது என கூறியுள்ளார்.
ஜார்களை தூக்கும் கலையில் தனது திறனை கண்டு கொண்ட அவர் ‘முடியாதது என்று எதுவும் இல்லை’ என நிரூபித்து ஒவ்வொருவருக்கும் எடுத்துக்காட்டாக இருக்கிறார்.