கொரோனா வைரஸ்: காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகளுக்கு சோனியா காந்தி அறிவுறுத்தல்
கொரோனா வைரஸ் எதிரொலியால் அவசரகால நிலையை உணர்ந்து செயல்பட காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகளுக்கு சோனியா காந்தி அறிவுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி,
சீனாவில் உருவான ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் 85 நாடுகளுக்கு பரவியுள்ளது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் உயிரை காவு வாங்கியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு 30–ஐ தாண்டிவிட்டது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகளுக்கு அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் ஆபத்தை சரியான முறையில் நாம் எதிர்கொள்ள வேண்டும். தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அந்தந்த பகுதிகளில் மாநிலங்களில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியம் ஆகும். இந்த அவசரகால நிலையை உணர்ந்து காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள் உடனடியாக விரைந்து செயல்பட வேண்டும். பொது சுகாதார அடிப்படை வசதிகளை அதிகரிக்க வேண்டும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.