கொரோனா விவகாரம்: சுகாதாரத்துறை மந்திரி கூறுவது டைட்டானிக் கப்பலின் கேப்டன் சொல்வது போல் உள்ளது - ராகுல்காந்தி விமர்சனம்

கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி கூறுவது டைட்டானிக் கப்பல் கேப்டன் சொல்வது போல் உள்ளது என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

Update: 2020-03-05 09:51 GMT
புதுடெல்லி,

மாநிலங்களவையில் பேசிய மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் ஹர்ஷ வர்தன் கொரோனா வைரஸ் குறித்த அறிக்கையை  வெளியிட்டு பேசினார். 

அதில்,  கொரோனா வைரஸ் குறித்து மக்கள் பீதி அடைய தேவையில்லை. நிலைமையை பிரதமர் மோடி உன்னிப்பாக கவனித்து வருகிறார். நானும் கவனித்து வருகிறேன். நிலைமையை கவனிக்க மந்திரிகள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் மாநில அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தப்படுகிறது. 

சீனா, கொரியா உள்ளிட்ட கொரோனா வைரஸ் பாதித்த நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என பொது மக்கள் கேட்டு கொள்ளப்படுகின்றனர். கொரோனா வைரஸ் நாடு முழுவதும் 28,529 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என  தகவல் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில் இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியதாவது:-

மத்திய அரசு கொரோனா வைரஸ் நெருக்கடியைக் கட்டுக்குள் வைத்திருப்பதாக சுகாதார மந்திரி கூறுவது, டைட்டானிக் கப்பலின் கேப்டன், தனது கப்பல் மூழ்காது, எனவே யாரும் பயப்பட வேண்டாம் என பயணிகளுக்குச் சொல்வது போல உள்ளது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க  அரசு என்ன திட்டம் வைத்து உள்ளது என்பதை ஆதாரபூர்வமாக மக்களின் முன் மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்  அதில் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்