கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கொலை மிரட்டல்
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக பினராயி விஜயன் இருந்து வருகிறார்.
சமீபத்தில் கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்தார். மேலும் இந்த சட்டத்தை கண்டித்து பல்வேறு போராட்டங்களையும் நடத்தினார்.
இப்போராட்டத்தின் போது சில இடங்களில் வன்முறைகள் நடந்தது. இதற்கு பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்தார்.
இந்தநிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை சீர்குலைக்க சில அமைப்புகள் முயல்வதாகவும், அவர்களை களையெடுக்க அரசு தயங்காது என்றும் எச்சரித்தார். இதற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் செயலாளர் ரஹீமுக்கு மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில், முதல்-மந்திரி பினராயி விஜயனையும், இளைஞர் அணிச் செயலாளர் ரஹீமையும் வீடு புகுந்து வெட்டுவோம் என்று எழுதப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தக் கடிதம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது பற்றி ரஹீம் திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் பல்ராம் குமார் உபாத்யாயிடம் புகார் கொடுத்தார்.
புகாரை பெற்றுக்கொண்ட போலீஸ் கமிஷனர் பல்ராம் உபாத்யாய் கூறியதாவது:-
முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு மிரட்டல் கடிதம் நேரடியாக வரவில்லை. இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில செயலாளருக்கு கடந்த 3-ந்தேதி அனுப்பப்பட்டுள்ளது. அந்த மிரட்டல் கடிதம் குறித்து விசாரிக்க மியூசியம் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடிதத்தை அனுப்பியது யார்? எங்கிருந்து அனுப்பப்பட்டது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று தெரிவித்தார்.