நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்: கவுண்ட்டவுன் தொடங்கியது

நாளை விண்ணில் ஏவப்படும் பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்டுக்கான கவுண்ட்டவுன் தொடங்கியது.

Update: 2019-12-10 12:38 GMT
சென்னை,

பூமியை கண்காணிப்பதற்காக ரீசாட்-2பிஆர்1 என்ற செயற்கை கோளை இஸ்ரோ உருவாக்கி உள்ளது. இதனை பி.எஸ்.எல்.வி சி48 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.  நாளை (புதன்கிழமை) மாலை 3.25 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.  

ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து, இறுதிக்கட்ட பணியான ‘கவுண்ட்டவுன்’ இன்று மாலை 4.40 மணிக்கு தொடங்கியது. 628 கிலோ எடைக்கொண்ட இந்த செயற்கை கோள் 5 ஆண்டுகள் விண்ணில் அதன் பணியை செய்ய உள்ளது.

இஸ்ரேல், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளை சேர்ந்த தலா 1 செயற்கைகோள், அமெரிக்காவின் 6 செயற்கை கோள்கள் என வணிக ரீதியிலான 9 செயற்கை கோள்களும் இந்த ராக்கெட்டில் வைத்து விண்ணுக்கு அனுப்பப்படுகின்றன.

பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை நேரில் பார்வையிட ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கு இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ ஆன்-லைன் முகவரியில் பெயர்களை பதிவு செய்ய வேண்டும்.

மேற்கண்ட தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்