நடு இரவில் சிக்கி தவிக்கும் பெண்களுக்கு உதவ அபேய் திட்டம் அறிமுகம்!

இரவு நேரத்தில் வீடு திரும்ப முடியாமல் தவிக்கும் பெண்களுக்கு உதவ ஆந்திர மாநில காவல்துறையினர் அபேய் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளனர்.

Update: 2019-12-06 07:12 GMT
ஐதராபாத்,

ஐதராபாத் அருகே பெண் கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு  எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்வுகளை ஏற்படுத்தியது.  இந்த சம்பவத்தையடுத்து  இரவு நேரத்தில் வீடு திரும்ப முடியாமல் தவிக்கும் பெண்களை பத்திரமாக வீட்டுக்கு அழைத்துச் செல்ல ஆந்திர காவல்துறை சார்பில் அபேய் என்ற திட்டம் ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக எட்டு கார்களும் 70 இருசக்கர வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 100 என்ற காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண்ணை தொடர்பு கொண்டு உதவி கேட்கும் பெண்களுக்கு, உடனடியாக வாகனங்களுடன் சென்று வீட்டிற்கு செல்ல உதவி செய்யப்படும்.

ஒவ்வொரு காரிலும் ஓட்டுனர் தவிர பெண் காவல் அதிகாரி, உடலில் பொருத்தப்பட்ட கேமராவுடன் இருப்பார். இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இந்த பாதுகாப்பு சேவை தொடரும்.

பெண்களிடமிருந்து அழைப்புகள் வந்த 10 நிமிடங்களுக்குள் அபேய் வாகனங்கள் அங்கு செல்வதை நாங்கள் உறுதி செய்வோம். அது முற்றிலும் இலவசம் என்று அம்மாநில டிஜிபி தெரிவித்துள்ளார். மேலும் படிப்படியாக மற்ற மாவட்டங்களில் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்றார்.

மேலும் செய்திகள்