விளையாட்டு வீரர்களின் தேர்வு நேர்மை, ஒளிவுமறைவின்றி நடைபெறுகிறது; கிரண் ரிஜிஜூ
சர்வதேச போட்டிகளுக்கு விளையாட்டு வீரர்கள் தேர்வு நேர்மை, ஒளிவுமறைவின்றி நடைபெறுகிறது என மத்திய மந்திரி ரிஜிஜூ கூறினார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 18ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. முதல் நாள் கூட்டத்தில், மறைந்த முன்னாள் மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ராம் ஜெத்மலானி உள்பட 10 முன்னாள், இந்நாள் உறுப்பினர்களுக்கு மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து பல்வேறு அமளிகளுக்கு இடையே அவையானது நடந்து வருகிறது. 4வது நாளான இன்று கேள்வி நேரத்தின்பொழுது பேசிய மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ, சர்வதேச போட்டிகளில் விளையாட்டு வீரர்களை தேர்வு செய்யும் நடைமுறை நேர்மையுடனும், ஒளிவுமறைவு இன்றியும் நடைபெறுகிறது.
ஏதேனும் முரண்படுதல்கள் இருப்பின் அரசு நடவடிக்கை எடுக்கும் என விளையாட்டு கூட்டமைப்புகளிடம் தெரிவித்து உள்ளோம்.
வெவ்வேறு போட்டிகளில் பங்கேற்பதற்காக பயிற்சி பெறும் விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்கான செலவுகள், பயண செலவுகள் மற்றும் பிற செலவுகளையும் அரசே ஏற்கிறது.
இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து விளையாட்டு கூட்டமைப்புகளும் அரசுடன் இணக்கமுடன் செயல்பட்டு வருகின்றன. முன்னாள் வீரர்களுக்கும் கூட அரசு உதவி செய்து வருகிறது என்று கூறினார்.