எம்.பி.க்களை காஷ்மீருக்கு செல்ல அனுமதிக்காததற்காக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் ஆவேசம்

எம்.பி.க்களை காஷ்மீருக்கு செல்ல அனுமதிக்காததற்காக காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசை குற்றம் சாட்டினார்.

Update: 2019-11-18 10:27 GMT
புதுடெல்லி,

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று காலை பாராளுமன்ற மக்களவை கூடியதும் தற்போதைய எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் எம்.பி.க்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ராம்ஜெத்மலானி, குருதாஸ் தாஸ்குப்தா, ஜெகநாத் மிஷ்ரா, சுக்தேவ் சிங் லிப்ரா ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, காஷ்மீரில் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா இன்னும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிரச்சினையை எதிர்க்கட்சிகள் எழுப்பின.

அவரை உடனடியாக விடுதலை செய்து பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ளச்செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்  மற்றும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ‘பரூக் அப்துல்லாவை காவலில் அடைத்து 108 நாட்கள் ஆகின்றன. பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க அவரை அனுமதிக்க வேண்டும். இது அவரது அடிப்படை ஜனநாயக உரிமை. அரசு இந்த உரிமைக்கு தடை விதிக்க முடியாது’ என்று ஆவேசமாக கூறினார்.

பின்னர், "சர்வாதிகாரத்தை அனுமதிக்க மாட்டோம். எங்களுக்கு நீதி வேண்டும். எதிர்க்கட்சியினர் மீதான தாக்குதலை நிறுத்துங்கள்" என்று முழக்கமிட்டவாறு சபாநாயகர் இருக்கையை நோக்கி அவர்கள் செல்ல முயன்றதால் மக்களவையில் சிறிது நேரம் பரபரப்பும், அமளியும் ஏற்பட்டது.

 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் குறித்து தவறான  வார்த்தையை ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எம்.பி. பயன்படுத்தினார், அதற்கு சில உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். சபாநாயகர் ஓம் பிர்லா, இந்த கருத்தை நீக்க வேண்டுமா? என்று ஆராய்வேன் என கூறினார்.

தொடர்ந்து பேசிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எம்.பி., "எங்கள் தலைவர் ராகுல் காந்தி (ஜம்மு-காஷ்மீர்) பார்வையிட அனுமதிக்கப்படவில்லை, எம்.பி.க்கள் பலர் திருப்பி அனுப்பப்பட்டனர். நாங்கள் அங்கு செல்ல முடியாது என்பது அவமானமல்லவா? புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர், ராணுவ வீரர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்" என கூறினார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காந்தி குடும்பத்தினருக்கான சிறப்பு பாதுகாப்பு படையை  திரும்பப் பெறுவது குறித்த பிரச்சினையையும் எழுப்பினார்.

இதற்கிடையில், பரூக் அப்துல்லாவை விடுதலை செய்வது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் சபாநாயகரிடம் ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் விவசாயிகள் படும் கஷ்டங்கள் மக்களவையில் இன்று  எதிரொலித்தது. இந்த பிரச்சினையை எழுப்பிய சிவசேனா எம்பிக்கள், இந்த விஷயத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி வெளிநடப்பு செய்தனர். அதன் பின்னர் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்பிக்களும் இதே கோரிக்கையை முன்வைத்து வெளிநடப்பு செய்தனர்.

முன்னதாக, ஜம்மு காஷ்மீர் நிலவரம் தொடர்பாக காங்கிரஸ், திமுக மற்றும் தேசிய மாநாட்டு கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்