தஞ்சையில் தயாரிக்கப்பட்ட கருப்புக்கவுனி அரிசி ‘நூடுல்ஸ்’ மத்திய மந்திரி அறிமுகப்படுத்தினார்
இந்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.) சார்பில், விளைபொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட மதிப்புக்கூட்டு பொருட்களின் கண்காட்சி டெல்லியில் நடைபெற்றது.
புதுடெல்லி,
இந்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.) சார்பில், விளைபொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட மதிப்புக்கூட்டு பொருட்களின் கண்காட்சி டெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகத்தின் கீழ் உள்ள அரசு நிறுவனங்கள் பல்வேறு மதிப்புக்கூட்டு பொருட்களை காட்சிக்கு வைத்து இருந்தன. இந்த கண்காட்சியை மத்திய சுகாதாரம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் தொடங்கி வைத்தார்.
கண்காட்சியில், தஞ்சையில் உள்ள இந்திய உணவு பதன தொழில்நுட்பக்கழகம் சார்பிலும் அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது. இதில், கேழ்வரகு மற்றும் தேங்காய் ஐஸ்கிரீம் உள்பட பல்வேறு வகையான மதிப்புக்கூட்டு பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. மேலும், தஞ்சையில் புதிதாக தயாரிக்கப்பட்ட கருப்புக்கவுனி அரிசி ‘நூடுல்ஸ்’ மற்றும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மக்காச்சோளத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட பைகளை மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் அறிமுகம் செய்தார்.
இதில், தஞ்சாவூர் இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழக இயக்குனர் சி.அனந்தராம கிருஷ்ணன் பங்கேற்றார்.