கர்தார்பூர் பாதை திறப்பு:எங்களுக்குள் அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் மோடிஜிக்கு மனமார்ந்த நன்றி - நவ்ஜோத் சிங் சித்து

எங்களுக்குள் அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் மோடிஜிக்கு மனமார்ந்த நன்றி என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும் ஆன நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.

Update: 2019-11-09 15:43 GMT
அமிர்தசரஸ்,

சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக், தனது வாழ்வின் கடைசி 18 ஆண்டுகளை பாகிஸ்தான், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கர்தார்பூரில் கழித்தார். அங்கு அவரது நினைவாக கர்தார்பூர் சாகிப் குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சீக்கியர்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று வருவது கடமையாக உள்ளது. இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இந்த கர்தார்பூர் சாகிப் குருத்வாரா உள்ளது. 

இந்நிலையில்  இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ள  சீக்கியர்களின் புனித தலமான கர்தார்பூர் குருத்வாரா நடைபாதை இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த பாதை திறப்பு விழாவில் மோடியும், முன்னாள் பிரதம மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும் ஆன நவ்ஜோத் சிங் சித்து கூறியதாவது:-   கர்தார்பூர் குருத்வாரா நடைபாதை திறந்து வைக்கப்பட்டதன் மூலம்  சீக்கிய யாத்ரீகர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். சீக்கிய யாத்ரீகர்களுக்கு உதவியதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எங்களுக்குள் அரசியல் வேறுபாடுகள் இருந்தால் பரவாயில்லை. பிரதமர் மோடிஜிக்கு எனது மனமார்ந்த நன்றி.

கர்தார்பூர் பாதை இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் ஆலயத்தை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கர்த்தர்பூரில் உள்ள தர்பார் சாஹிப்போடு இணைக்கிறது. இதன் மொத்த தூரம் 4.5 கி.மீ. பாகிஸ்தான் எல்லையில் அமைந்த கர்தார்பூர் பாதை பணிகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கும் எனது நன்றி. 

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்