உத்தரபிரதேசத்தில் நிலத்தில் காய்ந்த சருகுகளை எரித்த 300 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு
உத்தரபிரதேசத்தில் நிலத்தில் காய்ந்த சருகுகளை எரித்த 300 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
லக்னோ,
தலைநகர் டெல்லியில் கடந்த சில ஆண்டுகளாகவே இதுவரை இல்லாத அளவு காற்று மாசு ஏற்பட்டு அங்குள்ள மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். டெல்லியை சுற்றியுள்ள உத்தரபிரதேசம், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லைப்புற பகுதி விவசாயிகள் தங்கள் நிலத்தில் அறுவடைக்கு பிறகு காய்ந்த சருகுகளை எரிப்பதால் பெருமளவு காற்று மாசு ஏற்படுகிறது. இதையடுத்து விவசாயிகள் நிலத்தில் சருகுகளை எரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிலிபட்டில் தங்கள் நிலத்தில் காய்ந்த சருகுகளை எரித்த 300 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரபிரதேச போலீசாருக்கு உத்தரவிட்டது. இதை ஏற்று அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பில்சாண்டா, நெரியா, அமரியா, புரண்பூர், செராமு, மதகோண்டா, ஜகனாபாத், பிலாஸ்பூர், காஜூரூலா உள்ளிட்ட இடங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது சருகுகளை எரித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிலிபட்டை சேர்ந்த விவசாயி சரண்ஜித் சிங் கூறுகையில்,
நாங்கள் (விவசாயிகள்) அனைவரும் நெல்லை விற்று விட்டு அதற்குரிய தொகை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம். பயிர் செய்ததற்கான கடனையும் அடைக்க முடியவில்லை. இந்த சமயத்தில் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்வது கண்டிக்கத்தக்கது. இதனை எதிர்த்து பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றார்.