மராட்டியத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சிவசேனா தலைவர் - கவர்னர் 5 நிமிட சந்திப்பு

கவர்னருடனான சிவசேனா தலைவரின் 5 நிமிட சந்திப்பு மராட்டிய மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2019-10-28 11:44 GMT
மும்பை,

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. ஆளும் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி 161 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைப்பதற்கான தகுதியை பெற்றது. இதில் பா.ஜனதா 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றின. புதிய அரசை அமைப்பதற்கான பெரும்பான்மை பலம் பா. ஜனதா-சிவசேனா கூட்டணிக்கு இருந்தபோதிலும், முதல்-மந்திரி பதவியை யார் வகிப்பது? ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை மந்திரி பதவிகள்? என்று முடிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

ஆனால், முதல்-மந்திரி பதவியை இரு கட்சிகளும் தலா 2½ ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், இதேபோல் மந்திரி பதவிகளையும் சரிபாதியாக பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதிலும் சிவசேனா உறுதியாக இருக்கிறது. மும்பை ஒர்லி தொகுதியில் வெற்றி பெற்ற தனது மகன் ஆதித்ய தாக்கரேவை முதல்-மந்திரியாக்க சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே விரும்புகிறார்.

இதற்கிடையே புதிய அரசு அமைப்பதில் பா. ஜனதா-சிவசேனா கூட்டணியில் இழுபறி நிலை நீடிப்பதால் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆட்சியில் அதிகாரப்பகிர்வு தொடர்பாக பாஜக, சிவசேனா இடையே உடன்பாடு எட்டாமல் இழுபறி நீடிக்கும் நிலையில்,  மராட்டிய கவர்னரை  இரு கட்சித் தலைவர்களும் தனித்தனியே சந்தித்து உள்ளனர்.

இன்று, மராட்டிய  கவர்னர் பகத்சிங் கோஷ்யரை சிவசேனா தலைவர் திவாகர் ரோட்டே முதலாவதாகவும்,  முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இரண்டாவதாகவும் சந்தித்தனர். 

இன்று காலை 10.30 மணிக்கு கவர்னர்  கோஷ்யாரை முதன்முதலில்  சிவசேனா தலைவர் திவாகர் ரோட்டே சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் ஐந்து நிமிடங்கள் நீடித்தது.

இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசு அமைப்பதற்கு உரிமை கோரி சிவசேனா கவர்னரைச் சந்தித்தாக கூறப்பட்டது.

கவர்னருடனான  சந்திப்புக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த  திவாகர் ரோட்டே,

நான் கவர்னரை கடந்த 1993 முதல் சந்தித்து வருகிறேன்.எந்தவொரு அரசியல் பிரச்சினை குறித்தும்  நாங்கள் பேசவில்லை. அரசியல் அல்லது அரசு அமைப்பது குறித்து விவாதிக்கவில்லை என கூறினார்.

பின்னர் 30 நிமிடங்கள் கழித்து தேவேந்திர பட்னாவிஸ்  கவர்னர் கோஷ்யாரியை சந்தித்தார். அவர்களது  சந்திப்பு நீண்ட நேரம் நீடித்தது.  

தனது  ட்வீட்டரில் , "தற்போதைய (அரசியல்) சூழ்நிலை குறித்து விவாதித்ததாக" தேவேந்திர பட்னாவிஸ் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்