நிற்காமல் சளைக்காமல் வீசும் உன் பேரலைகள் 'முன்னேறுவதே வாழ்க்கை' கடல் பற்றி பிரதமர் மோடி எழுதிய தமிழ் கவிதை!!

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி கடற்கரையில் ஓய்வு நேரத்தில் இருந்த போது கடல் ஆற்றல் குறித்து பாராட்டி கவிதை எழுதியுள்ளார்.

Update: 2019-10-20 10:44 GMT
புதுடெல்லி,

பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் கடந்த 10, 11-ந் தேதிகளில் நடந்தது. அப்போது மாமல்லபுரத்தில் உள்ள அர்ஜுனன் தபசு, வெண்ணெய் உருண்டைபாறை, கடற்கரை கோவில் உள்ளிட்ட இடங்களின் வரலாற்று பெருமையை சீன அதிபருக்கு மோடி எடுத்துரைத்தார். இரு தலைவர்களும் வந்து சென்ற பிறகு மாமல்லபுரம் மேலும் பிரபலமானது. சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து விட்டது.

இந்நிலையில், கடற்கரையில் ஓய்வு நேரத்தில் இருந்த போது “ கடல் ஆற்றல்” குறித்து  கவிதை ஒன்றை பிரதமர் மோடி எழுதியுள்ளார்.

அந்த கவிதையை பிரதமர் அவரது டுவிட்டரில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். அந்த கவிதை விவரம் வருமாறு:-

அளப்பரிய, முடிவற்ற, ஒப்பில்லாத, வர்ணனைகளைக் கடந்த,..நீலக்கடலே உலகிற்கு உயிரளிக்கும் நீ பொறுமையின் இலக்கணம்
ஆழத்தின் உரைவிடம்......

வெளித்தோற்றத்திற்கு கோபமாய் வீரத்துடன் பேரிரைச்சலோடு எழும் அலைகள்- உன் வலியா? வேதனையா? துயரமா? எதன் வெளிப்பாடு? இருந்த போதிலும் உன்னை கலக்கமின்றி, தடுமாற்றமின்றி உறுதியுடன் நிற்க செய்கிறது உன் ஆழம்....

அலைகடலே! அடியேனின் வணக்கம்.

உன்னிடம் உள்ளது எல்லையில்லாத வலிமை. முடிவில்லாத சக்தி ஆனாலும் பணிதலின் பெருமையை நிமிடந்தோறும் நவில்கிறாய் - நீ கரையைக் கடக்காமல், கண்ணியத்தை இழக்காமல்.

கல்வித் தந்தையாய் ஞான குருவாய் வாழ்க்கைப் பாடத்தை போதிக்கிறாய் நீ புகழுக்கு ஏங்காத..புகலிடத்தை நாடாத பலனை எதிர்நோக்காத உன் பயணம் தரும் பாடங்கள் ஏராளம்....

நிற்காமல் சளைக்காமல் வீசும் உன் பேரலைகள் 'முன்னேறுவதே வாழ்க்கை' என்ற உபதேச மந்திரத்தை உணர்த்தும் முடிவில்லாத பயணமே! முழுமையான உன் போதனை...

விழும் அலைகளிலிருந்து மீண்டும் எழும் அலைகள் மறைந்து மீண்டும் துவங்கும்.. உதயம் பிறப்பு - இறப்பு என்பது தொடர் வட்டம்
உனக்குள் மடிந்து - பின் உயிர்த்தெழும் அலைகள் மறுபிறப்பின் உணர்வூட்டம்....

பழம்பெரும் உறவான சூரியனின் புடமிட்ட தன்னையழித்து, விண்ணைத் தொட்டு கதிரவனை முத்தமிட்டு மழையாய்ப் பொழிந்து..

நீர்நிலைகளாய் சோலைகளாய் மகிழ்ச்சி மனம் பரப்பி படைப்பை அலங்கரித்து - எல்லோருக்கும் வாழ்வளிக்கும் நீர் நீ....

வாழ்வின் பேரழகு நீ - விஷத்தை அடக்கிய நீலகண்டன் போல - நீயும் எது வந்தாலும் ஏற்றுக்கொண்டு புது வாழ்வைப் பிறர்க்களித்து
சொல்கிறாய் சிறந்த வாழ்வின் மறைபொருளை....!!

இவ்வாறு பிரதமர் மோடி தமிழின் அழகிய வடிவில் கவிதை எழுதி உள்ளார்.

மேலும் செய்திகள்