90 வெளிநாட்டு தூதர்கள் பொற்கோவிலுக்கு அடுத்த வாரம் வருகை
புதுடெல்லியில் உள்ள 90 வெளிநாட்டு தூதரக தலைவர்கள் பஞ்சாப் பொற்கோவிலுக்கு அடுத்த வாரம் வருகை தருகின்றனர்.
புதுடெல்லி,
சீக்கிய மதத்தின் நிறுவனர் குரு நானக் தேவ். இவரது 550வது ஆண்டு பிறந்த தினம் அடுத்த வாரம் கொண்டாடப்படுகிறது. இதனை உலகம் முழுவதும் கொண்டாட மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இதற்காக புதுடெல்லியில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களின் தலைவர்களுக்கு, பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலுக்கு வருகை தரும்படி இந்திய கலாசார உறவுகளுக்கான கவுன்சில் (ஐ.சி.சி.ஆர்.) அழைப்பு விடுத்துள்ளது.
இதன்படி, புதுடெல்லியில் உள்ள 90 வெளிநாட்டு தூதரகங்களின் தலைவர்கள் பொற்கோவிலுக்கு அடுத்த வாரம் வருகை தருகின்றனர். இந்த நிகழ்ச்சியை ஐ.சி.சி.ஆர்., பஞ்சாப் அரசு மற்றும் ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழு ஆகியவை இணைந்து நடத்துகிறது.
இந்நிகழ்ச்சியில் வெளிநாட்டு தூதரக தலைவர்களுடன் மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி மற்றும் ஐ.சி.சி.ஆர். தலைவர் வினய் சஹஸ்ரபுத்தே ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
குரு நானக் தேவின் அன்பு, அமைதி, சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் பற்றிய போதனைகள் உலகளவில் ஏற்று கொள்ளப்பட்டுள்ளதுடன் ஆன்மிகம், மனித தன்மை, பக்தி மற்றும் உண்மை ஆகியவை பற்றிய செய்தியை கொண்டு சென்று சேர்க்கிறது என அதுபற்றி வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கின்றது.