அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இந்து - முஸ்லிம் அமைப்புகள் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல்

அயோத்தி வழக்கில் இந்து, இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்தது.

Update: 2019-10-19 09:40 GMT
புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று 2010-ம் ஆண்டு அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

இதை எதிர்த்து 14 பேர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்து வரும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காணும் யோசனையை முன்வைத்தது. அதற்காக, சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையில், ‘வாழும் கலை’ அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரை கொண்ட சமரச குழுவை அமைத்தது.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆகஸ்டு 2-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, சமரச குழுவின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், அக்குழுவின் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்திருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், வழக்கை ஆகஸ்டு 6-ந் தேதி முதல், வக்கீல்கள் விவாதம் முடிவடையும் வரை தினசரி அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டே விசாரிக்கும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

தினசரி அடிப்படையில் அதே அமர்வில் தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணை (16-ம் தேதி) 40-வது நாளாக நடைபெற்றது.

சமரச குழு, தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், இந்து-முஸ்லிம் இருதரப்பினரும் ஒரு தீர்வுக்கு சம்மதிப்பதாக கூறப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்றும், ஆனால் மசூதிக்கும் இடம்விட வேண்டும் என்றும் தீர்வு ஏற்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

16-ம் தேதி நடந்த  விசாரணையில், ராம் லல்லா விக்கிரகம் தரப்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், கோவில் தொடர்பான விஷயங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டது என்றோ, அந்த இடம் முழுவதுமாக அவர்களிடம் இருப்பது பற்றியோ எதிர்தரப்பினால் இதுவரை எதையும் நிரூபிக்க முடியவில்லை என்றும் கூறி தனது வாதத்தை முடித்துக்கொண்டார்.

நிர்மோகி அகாரா தரப்பில் வாதாடிய மூத்த வக்கீல் எஸ்.கே.ஜெயின், பாபர் அயோத்திக்கு வந்ததற்கான ஆதாரம் எதுவும் கிடையாது. அங்கு பாபர் மசூதியை கட்டினார் என்று முஸ்லிம் அமைப்புகளால் நிரூபிக்க முடியவில்லை என்று கூறி தன் வாதத்தை முடித்தார்.

இந்து அமைப்புகள் தரப்பில் எதிர்பதில் வாதங்கள் முடிவடைந்து முஸ்லிம்கள் தரப்பில் எதிர்பதில் வாதங்கள் தொடங்கின. ராஜீவ் தவான் வாதத்துடன், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன.

இதையடுத்து, அனைத்து தரப்பினரும் தங்களது எழுத்துபூர்வமான வாதங்களை 3 நாட்களுக்குள் தாக்கல் செய்யுமாறு கூறிய நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில், அயோத்தி வழக்கில்   40 நாட்களாக நடந்த விசாரணை அக்டோபர் 16-ம் தேதி முடிந்த நிலையில் இன்று  எழுத்துப்பூர்வ வாதங்களை இந்து - இஸ்லாமிய அமைப்புகள் சார்பில்  உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அடுத்த மாதம் 17-ந் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பணி ஓய்வு பெற உள்ளார் என்பதும், அதற்குள் இந்த தீர்ப்பை வழங்க வேண்டிய கட்டாயத்தில் நீதிபதிகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்