பண மோசடி வழக்கு: டி.கே.சிவக்குமாரின் நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை நீட்டிப்பு

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட கர்நாடக முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாரின் நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-10-15 10:43 GMT
புதுடெல்லி,

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கர்நாடக முன்னாள் மந்திரியும்,  காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான டி.கே.சிவக்குமார் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பிறகு அவர் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் கைது செய்யப்பட்டு ஒரு மாதத்திற்கு  மேலாகிவிட்டது.

டி.கே.சிவக்குமார் சார்பில் டெல்லி சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து அவர் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இதனிடையே டி.கே.சிவக்குமாரின் ஜாமீன் மனு டெல்லி ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டி.கே.சிவக்குமார் தரப்பில் ஆஜரான வக்கீல், விசாரணையை இன்று ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொண்டார். இதை  ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை இன்றைக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்தார்.

இந்நிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட கர்நாடக முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாரின் நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

மேலும் சிறையில், டி.கே.சிவக்குமாருக்கு நாற்காலி மற்றும் டிவி வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்