ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: அதிகாரிகளுக்கு ‘ஹலோ’ சொல்ல வந்தேன் - கார்த்தி சிதம்பரம் கிண்டல்

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கின் அதிகாரிகளுக்கு ‘ஹலோ’ சொல்ல வந்ததாக, அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு வந்த கார்த்தி சிதம்பரம் கிண்டலாக கூறினார்.

Update: 2019-10-09 22:45 GMT
புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு விசாரணைக்காக டெல்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்துக்கு வந்த கார்த்தி சிதம்பரம், அங்கிருந்து கிளம்பும் போது நிருபர்களிடம், தசரா பண்டிகையையொட்டி அதிகாரிகளுக்கு ‘ஹலோ’ சொல்ல வந்ததாக கிண்டலாக கூறினார்.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம், அன்னிய முதலீடாக ரூ.305 கோடி பெற அனுமதி வழங்கப்பட்டதில், அப்போதைய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அந்த நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக சி.பி.ஐ. கடந்த 2017-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. அதன் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவும் அவர் மீது 2018-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகளால் 2018-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந் தேதி கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம், விசாரணைக்கு பின்னர், சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு உத்தரவின் பேரில் நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, கார்த்தி சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.பி.கர்க் கடந்த மார்ச் 23-ந் தேதி அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.

இந்த வழக்கில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின் நாடுகளில் உள்ள கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ரூ.54 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கப்பிரிவு முடக்கிவைத்து இருக்கிறது.

இந்த வழக்கில் ஏற்கனவே சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த ஆகஸ்டு 21-ந் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். கடந்த வாரம் டெல்லி ஐகோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்த நிலையில் அவருடைய மேல்முறையீட்டு மனு மீது வருகிற 15-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், விசாரணைக்காக நேற்று (புதன்கிழமை) ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பி இருந்தது. ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கிடைத்த புதிய தகவல்களின் அடிப்படையிலும், ப.சிதம்பரத்திடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையிலும் விசாரிப்பதற்காக அவருக்கு சம்மன் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து நேற்று கார்த்தி சிதம்பரம் டெல்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினார்கள்.

விசாரணை முடிந்து அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த கார்த்தி சிதம்பரத்திடம் அதுபற்றி நிருபர்கள் கருத்து கேட்டனர்.

அதற்கு அவர், “நான் அதிகாரிகளை சந்தித்து ‘ஹலோ’ சொல்லி அவர்களுக்கு தசரா வாழ்த்து கூறலாம் என்று நினைத்தேன். அதற்காக வந்தேன்” என்று கிண்டலாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

மேலும் செய்திகள்