தனியார் நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்தும் ரெயில்களை வாங்கலாம் - மத்திய அரசு அனுமதி

50 ரெயில் வழித்தடங்களில் ரெயில்களை இயக்க முன்வரும் தனியார் நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்தும் தங்களுக்கு விருப்பமான ரெயில்களை வாங்கலாம் என்று மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

Update: 2019-10-05 23:00 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் 2021-ம் ஆண்டு டிசம்பருக்கு பின்னர் டெல்லி-மும்பை, டெல்லி-ஹவுரா உள்பட 50 ரெயில் வழித்தடங்களில் சுமார் 3 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு தனியார் நிறுவனங்கள் ரெயில்களை இயக்க அனுமதிப்பது என ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது. இப்போது வெளிநாடுகளில் இருந்தும் அவர்கள் ரெயில்களை வாங்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தனியார் ரெயில் நிறுவனங்கள் இந்தியன் ரெயில்வேயின் ரெயில்கள் மற்றும் என்ஜின்களை வாங்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. அவர்கள் விரும்பினால் எந்த வெளிநாட்டில் இருந்தும் விருப்பமான ரெயில்களை வாங்கலாம். ஆனால் அந்த ரெயில்கள் இங்கு பாதுகாப்பு சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட பின்னரே இயங்குவதற்கு அனுமதிக்கப்படும்.

தனியார் ரெயில்கள் இயங்கும் இருப்பு பாதைகள் அனைத்தும் அரை அதிவேக (செமி-ஹைஸ்பீடு) பாதைகளாக மேம்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் தங்கள் ரெயில்களை அதன்மீது இயக்க அனுமதிக்கப்படுவார்கள். சமீபத்தில் மத்திய மந்திரி சபை இந்த இருப்புபாதைகளை மேம்படுத்துவதற்கான ரூ.3,500 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஸ்பெயின் நாட்டின் ‘டெல்கோ’ ரெயில்கள் இந்திய இருப்பு பாதைகளில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் சீனாவில் தயாரிக்கப்படும் அதிவேக ரெயில்கள் இந்திய இருப்பு பாதைகளில் ஆபத்தானதாக இருக்கும்.

டெல்லி-மும்பை, டெல்லி-ஹவுரா ஆகிய வழித்தடங்களில் மட்டும் தற்போது மொத்த ரெயில் பயணிகளில் 25 சதவீதம் பேர் பயணிக்கிறார்கள். இதனால் இந்த பாதையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும். இந்த வழித்தடங்களில் உள்ள இருப்பு பாதைகள் கிழக்கு ரெயில்வே, மேற்கு ரெயில்வே பகுதிகளில் தனியார் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்ட பின்னரே மேம்படுத்தப்படும். அதுவரை பயணிகள் ரெயில்கள் மட்டுமே இயக்கப்படும்.

இந்த வழித்தடங்களை மேம்படுத்த பல வருடங்கள் ஆகலாம். இது மிகவும் சிக்கலானது என்பதால் ரெயில்வே நீண்டகால திட்டத்தை தொடங்கியுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் இப்போதே தொடங்கிவிட்டது.

தனியார் நிறுவனங்களுக்கான விதிமுறைகள் மற்றும் ஒப்பந்த ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

தனியார் ரெயில் போக்குவரத்துக்கு ஒரு முன்னோடி திட்டமாகத்தான் டெல்லி-லக்னோ மற்றும் மும்பை-ஆமதாபாத் இடையே தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் இயக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் குறைகள் இருந்தால் தனியார் ரெயில் போக்குவரத்து நிபந்தனைகளில் சரிசெய்யப்படும்.

ஒருவேளை தனியார் ரெயில் நிறுவனங்கள் அதிகரித்தால் ஒரு ஒழுங்குமுறை அலுவலகமும் தேவைப்படும். இதற்கான பணிகளை ரெயில்வே ஒழுங்குமுறை ஆணையம் செய்யும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

மேலும் செய்திகள்