இஸ்ரோ: சந்திரயான்-2வில் இருந்து எடுக்கப்பட்ட நிலவின் மிக நெருக்கமான புகைப்படங்கள் வெளியீடு

சந்திரயான்-2வின் அதிநவீன கேமராவில் இருந்து எடுக்கப்பட்ட நிலவின் மிக நெருக்கமான புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

Update: 2019-10-05 11:21 GMT
ஸ்ரீஹரிகோட்டா,

நிலவை ஆராய்வதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி அய்வு மையத்தில் இருந்து, கடந்த ஜூலை 22 ஆம் தேதி அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலம், தற்போது நிலவின் சுற்றுவட்ட பாதையில் சுற்றி வருகிறது. இதன் மூலம் நிலவின் மேற்பரப்பை இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

முன்னதாக கடந்த 3 ஆம் தேதி, நிலவின் மேற்பரப்பில் மின்காந்த துகள்கள் இருப்பதை சந்திரயான்-2 விண்கலம் கண்டுபிடித்ததாக இஸ்ரோ தெரிவித்திருந்தது. மேலும் அந்த மின்காந்த துகள்களின் தீவிர தன்மையில் ஏற்படும் மாறுபாடு குறித்த தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் இஸ்ரோ தெரிவித்தது.

இதனை தொடர்ந்து இன்று சந்திரயான்-2 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன கேமரா மூலம் நிலவின் மேற்பரப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த பதிவில், சந்திராயன்-2வில் பொருத்தப்பட்டுள்ள கேமராவானது மிக துல்லியமான புகைப்படங்களை எடுக்கக்கூடியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவ பகுதியில் 14 கி.மீ விட்டம் 3 கி.மீ ஆழம் கொண்ட ‘போகஸ்லாஸ்கி இ’ என்று பெயரிடப்பட்ட பள்ளத்தாக்கை, 100 கி.மீ உயரத்திலிருந்து இந்த கேமரா படம் பிடித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி இஸ்ரோவுடனான தனது தொடர்பை இழந்தது. இருப்பினும் சந்திரயான்-2 ஆர்பிட்டர் மூலம் நிலவின் மேற்பரப்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்