ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிறையில் உள்ள ப.சிதம்பரம் ஜாமீன் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Update: 2019-10-03 05:47 GMT
புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததை தொடர்ந்து கடந்த ஆகஸ்டு 21-ந்தேதி அவரை சி.பி.ஐ. கைது செய்து, தங்கள் காவலில் வைத்து விசாரித்து வந்தது. பின்னர் அவருடைய காவல் முடிவடைந்ததால் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த மாதம் 5-ந் தேதி அவரை தனிக்கோர்ட்டில் நீதிபதி அஜய்குமார் குஹர் முன்பு ஆஜர்படுத்தினார்கள்.

இந்த வழக்கை விசாரித்த தனிக்கோர்ட்டு நீதிபதி, ப.சிதம்பரத்தை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 19-ந் தேதி அவருடைய நீதிமன்ற காவல் இன்று (3-ந் தேதி) வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையே ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கோரும் மனு டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. 

அவர் சாட்சியங்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்க வாய்ப்பு உண்டு என்பதாலும், சி.பி.ஐ. விசாரணை முன்னேறிய நிலையில் இருப்பதாலும் அவருக்கு ஜாமீன் வழங்க விரும்பவில்லை. எனவே, மனுதாரரின் ஜாமீன் கோரும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது.  

இந்நிலையில் சிபிஐ நீதிமன்றம், டெல்லி ஐகோர்ட்டு ஜாமீன் மறுத்ததை அடுத்து ஐ.என்.எக்ஸ். வழக்கில்  ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஆகஸ்ட் 21-ம் தேதி கைதான ப.சிதம்பரம் தற்போது திகார் சிறையில் உள்ளார்.

மேலும் செய்திகள்