அரசுக்கும், மக்களுக்கும் இடையேயான இடைவெளி மறைய வேண்டும்; குடியரசு தலைவர் அறிவுரை
அரசுக்கும், மக்களுக்கும் இடையேயான இடைவெளி மறைய வேண்டும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழுவுக்கு குடியரசு தலைவர் அறிவுரை வழங்கியுள்ளார்.
புதுடெல்லி,
புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்துடன் கடந்த 2017ம் ஆண்டு பிரிவை சேர்ந்த 169 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுவினர் சந்தித்து பேசினர். பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உதவி செயலாளர்களாக பணிகளில் உள்ள அவர்களுடன் நடந்த சந்திப்பில் பேசிய குடியரசு தலைவர், குழுவாக பணியாற்ற வேண்டும் என்பதனை வலியுறுத்துங்கள். பங்காற்றிய ஒவ்வொருவரையும் அங்கீகரியுங்கள்.
இப்படி செய்யும்பொழுது நீங்களே தலைமையேற்று ஒரு முன்மாதிரி நபராக இருங்கள். சமூக மற்றும் பொருளாதார திட்டங்களில் பங்கு பெறும் மக்களை ஊக்குவியுங்கள் என அவர்களிடம் கூறினார்.
நமக்கு மற்றும் அவர்களுக்கு என்பதில் அரசு நிர்வாகம் இல்லை. அது, நமக்கு மற்றும் நாம் ஒன்றிணைந்து என்பதிலேயே உள்ளது. அரசு மற்றும் மக்களுக்கு இடையேயான இடைவெளி மறைய வேண்டும். அரசு அதிகாரிகளின் அணுகுமுறையானது மக்களை உணருபவர்களாகவும் மற்றும் மக்களை மையப்படுத்தியும் இருக்க வேண்டும் என்றும் குடியரசு தலைவர் கூறினார்.
நமது குடிமக்களுக்கு வாழ்க்கையை எளிமையாக்குவதற்கான பணிகளை சிறப்புடன் செய்யவே நாம் கடமையாற்றி வருகிறோம் என்றும் அவர் கூறினார்.