கார்களில் முதலுதவி பெட்டியில் ஆணுறை இல்லை என்றால் அபராதம் - ஓட்டுநர்கள் வேதனை
கார்களில் உள்ள முதலுதவி பெட்டியில் ஆணுறை இல்லை என்றால் போலீசார் அபராதம் வசூலிக்கிறார்கள் என்று ஓட்டுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
புதுடெல்லி,
புதிய மோட்டார் வாகனச் சட்டம் செப் 1-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் அமலானது. பல மடங்கு உயர்த்தப்பட்ட அபராத அடிப்படையில் பல மாநிலங்கள் அப்படியே அபராதத்தை அமல்படுத்தியுள்ளன. இதனால் பல மாநிலங்களில் வாகன ஓட்டிகளை போலீசார் கடும் சிரமத்துக்குள்ளாக்குகின்றனர்.
இந்தநிலையில், டெல்லியில் போக்குவரத்து விதிகளை பின்பற்றி சரியாக வாகனங்களை ஓட்டி வந்தாலும், ஆணுறை இல்லாத பட்சத்தில் அபராதம் வசூலிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அபராதம் குறிப்பாக ஓலா மற்றும் உபர் ஓட்டுநர்களிடம் வசூலிக்கப்படுவதாகவும், போக்குவரத்து தலைமையிலிருந்து அதிகாரப்பூர்வமாக இந்த விதியை அறிவிக்கப்படாத நிலையில், போலீசார் அபராதம் வசூலிப்பது நியாயமற்றது என கார் ஓட்டுனர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து கார் ஓட்டுநர்கள் கூறுகையில், மழை நேரங்களில் ஷூக்களை பாதுகாப்பாக வைக்க ஆணுறை பயன்படுகிறது. ஏதேனும் காயம் ஏற்பட்டால் ரத்தக்கசிவை நிறுத்தவும் பயன்படுகிறது. ஆனால் ஆணுறையின் பயன்பாடுகள் குறித்து போக்குவரத்து காவலர்களுக்கு தெரியவில்லை.
அவர்களிடம் கேட்டால் பதில் தெரியாமல் சிரிக்கிறார்கள். ஆனால் அபராதம் மட்டும் வசூலிக்கிறார்கள் என கார் ஓட்டுனர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
எதற்காக ஆணுறையை முதலுதவி பெட்டியில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றால், விபத்துகள் ஏற்படும் பொழுது கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டாலோ அல்லது அடிபட்ட இடத்திலிருந்து ரத்தம் வெளியேறினாலோ அந்த இடத்தில் ஆணுறையைக் கொண்டு இறுக்கிக் கட்டினால் ரத்தம் விரயம் ஆவதை தடுக்க முடியும். இதனால் விபத்தில் சிக்கியவரை மருத்துவமனையில் சேர்க்கப்படும் பொழுது அவரை எளிதில் காப்பாற்றிவிட முடியும்.
இதற்காக தான் கார் ஓட்டுநர்கள் முதலுதவி பெட்டிற்குள் இரண்டு மூன்று ஆணுறைகளை வைத்திருக்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த நுட்பம் சில ஓட்டுநர்களுக்குத் தெரிந்துள்ளதால் ஆணுறையுடன் பயணம் செய்கிறார்கள். தெரியாதவர்கள் போக்குவரத்து போலீசாரிடம் சிக்கிக்கொண்டு அபராதம் கட்டும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
இதுகுறித்து டெல்லி போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆணுறை குறித்து எந்த அபராதமும் வசூலிக்கப்பட நிர்பந்திக்கவில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.